உம் திருமுன் வைத்துக் காத்தருளும்
திருப்பாடல் 131: 1, 2, 3
வாழ்க்கையில் குறிப்பிட்ட வயதை அடைந்தபிறகு தனிமையில் இருக்கிறபோது பெரும்பாலானோர் நினைக்கிற சிந்தனை, “என்ன வாழ்க்கை இது! இன்று மலர்ந்து நாளை கருகிவிடும் புல்லைப் போன்ற நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு வன்மங்கள், பொறாமை, பிடிவாதம் கொண்டிருந்தோம். இது நமக்கு தேவையா?”. இது சாதாரண வார்த்தைகள் அல்ல. ஒருவருடைய உள்ளக்கிடக்கையை படம்பிடித்துக் காட்டக்கூடிய வார்த்தைகள். இறப்பு நிகழ்கிறபோது, வாழ்க்கை நாம் எண்ணியதைப் போல நடக்காதபோது, இப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. “காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா” போன்ற வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை!. இப்படி வாழ்க்கையில் எல்லாவற்றையும் அனுபவித்த பிறகு, பெற்றுக்கொண்ட பாடங்களை இன்றைய திருப்பாடல் நமக்கு தெளிவாக படம்பிடித்துக் காட்டுகிறது.
அசோகர் எவ்வளவோ போர்களில் எதிரிகளை வெற்றி கொண்டிருக்கிறார். ஆனால், கலிங்கப்போரில் அவர் சந்தித்த உயிரிழப்புகள் அவர் பெற்ற வெற்றியை, கசப்பான உணர்வாக மாற்றிவிட்டது. இந்த போர் யாருக்காக? எதை அடைவதற்காக? அந்த வெற்றி அவருக்குள்ளாக வெறுமையை தருகிறது. அந்த வெறுமையான நிலையை ஆசிரியர் தன்னுடைய பாடல்களில் வெளிப்படுத்துகிறார். வாழ்க்கையில் அவர் சந்தித்த அனுபவங்கள் அவருக்கு இந்த பாடத்தைத் தருகின்றன. ”என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை, செருக்கு இல்லை” என்கிற வரிகள் இதனை தெளிவாக நமக்கு உணர்த்துகிறது. உண்மையான நிறைவு ஆண்டவர் தான், என்கிற வாழ்வியல் பாடத்தை இந்த அனுபவம் அவருக்குக் கற்றுக்கொடுக்கிறது.
வாழ்க்கை அனுபவம் கடவுளுக்கு நம்முடைய வாழ்வில் நாம் கொடுக்க வேண்டிய இடத்தைக் கற்றுக்கொடுக்கிறது. அந்த அனுபவத்தை நாம் எப்போது பெறுகிறோம்? என்பதை வைத்து, நம்முடைய வாழ்க்கை அமைகிறது. எவ்வளவு விரைவாக அதைப் பெற்றுக்கொள்கிறோமோ, அவ்வளவுக்கு நாம் இறைவன் தரும் நிறைவைச் சுவைப்பது உறுதி.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்