உம் திருச்சட்டத்தின் மீது எத்துணைப் பற்றுகொண்டுள்ளேன்
திருப்பாடல் 119: 57, 72, 76 – 77, 127 – 128, 129 – 130
திருச்சட்டம் என்பது கடவுள் மக்களின் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக கொடுத்த ஒழுங்குமுறைகள். ”எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும்” என்பது தான், சட்டங்களின் அடிப்படைத்தன்மை. எல்லா மனிதருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு, சட்டங்கள் இயற்றப்படுகிறது. ஆனால், மனிதர்களின் சுயநலம் அந்த சட்டங்களை காற்றிலே பறக்கவிட்டு, ஒட்டுமொத்த அமைதியையும் சீர்குலைப்பதாக அமைகிறது. இந்த திருப்பாடல் கடவுளின் திருச்சட்டத்தில் நம்பிக்கை கொண்ட ஓர் ஆன்மாவின் பாடல்.
திருச்சட்டம் என்பது கடைப்பிடிப்பதற்கு எளிதானது அல்ல. மற்றவர்கள் எப்படி வாழ்ந்தாலும் நான் இப்படித்தான், இந்த வரையறைக்குள் தான் வாழுவேன் என்பது கடினமான ஒன்று. ஆனாலும், இறுதிவரையில் அதனை கடைப்பிடித்து வாழக்கூடிய மனிதர்கள் இருக்கிறார்கள். அப்படி வாழ முயற்சி எடுத்துக்கொண்டிருந்த மனிதரின் ஆசை உணர்வுகள் இங்கே பிரதிபலிக்கிறது. திருச்சட்டத்தை உயர்வான, விலைமதிப்பில்லாதவற்றிற்கு ஒப்பிடுகிறார். அது நேரிய வாழ்விற்கும், நிறைவான, நிரந்தரமான வாழ்விற்கும் அழைத்துச்செல்கிறது என்பதை இது நமக்கு விளக்குகிறது. திருச்சட்டத்தின் மீது நாம் பக்தியாக இருந்தால், அது நமக்கு வாழ்வு தருகிறது என்பதை, இது நமக்கு உறுதிப்படுத்துகிறது.
இறைவனுடைய அன்பை முழுமையாகப் பெறுவதற்கு, அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். அந்த கட்டளைகளுக்கு ஏற்ப நமது வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும். அது நமக்கு வாழ்வைப்பற்றிய அறிவையும், அனுபவத்தையும் நிறைவாக வழங்கும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்