”உம் தாய் பேறுபெற்றவர்” (லூக்கா 11:27)
அன்னை மரியா இயேசுவைக் கருத்தாங்கி, பத்துமாதம் சுமந்து, இவ்வுலகிற்குப் பெற்றளித்தார். எனவே அவரை நாம் ”பேறுபெற்றவர்” எனப் போற்றுவது பொருத்தம்தான். இதையே இயேசுவின் போதனையைக் கேட்டுக்கொண்டிருந்த பெண் ஒருவரும் வெளிப்படையாகப் பறைசாற்றினார். இயேசுவின் தாய் பேறுபெற்றவர் என்பதற்கு இரு முக்கிய காரணங்கள் உண்டு. முதலில், மரியா இயேசுவைத் தம் வயிற்றில் தாங்கி, அவரைத் தம் மகனாக இவ்வுலகிற்கு அளித்தார். மரியா இயேசுவின் தாய் மட்டுமல்ல, கடவுளும் மனிதருமாகிய இயேசுவைப் பெற்றதால் அவர் ”கடவுளின் தாய்” எனவும் அழைக்கப்படுகிறார். ஆனால், மரியா பேறுபெற்றவர் எனப் போற்றப்படுவதற்கு இன்னொரு முக்கியமான காரணம் உண்டு. அதாவது, மரியா ”கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடித்தார்” (காண்க: லூக்கா 11:28). கடவுளின் தாய் ஆவதற்கு இசைவு தெரிவித்தார் மரியா. கணவரோடு கூடி வாழ்வதற்கு முன்னரே இயேசுவைத் தம் வயிற்றில் தூய ஆவியின் வல்லமையால் கருத்தாங்கிய மரியா கடவுளின் வார்த்தைக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்தார். இதுவே அவரைப் ”பேறுபெற்றவர்” ஆக மாற்றிற்று.
மரியாவைப் போல நாமும் பேறுபெற்றவர் ஆக வாய்ப்பு உள்ளது. நாமும் மரியாவைப் போல இறைவார்த்தையைக் கேட்க வேண்டும். கடவுளின் வார்த்தை நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்ற நடத்தை நமதாக மாற வேண்டும். அப்போது நாமும் பேறுபெற்றவர் ஆவோம். இவ்வாறு கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்போர் தம்முடைய சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் தம் வாழ்க்கையை அமைக்காமல் கடவுளின் விருப்பத்தின்படியே செயல்பட முன்வருவார்கள். கடவுளின் விருப்பம் நாம் அவரை அன்புசெய்து வாழ்வதும் நம்மை அடுத்திருப்போரை நம்மைப்போல அன்புசெய்வதுமே ஆகும். எனவே, கடவுளில் நாம் முழுமையாக நம்பிக்கை கொண்டவர்களாக மாற வேண்டும்; அன்புக் கட்டளையை நாம் செயல்படுத்த வேண்டும். அப்போது நாம் எதிர்நோக்கிக்; காத்திருக்கின்ற பேரின்ப வாழ்வு நமதாகும். நாம் உண்மையிலேயே ”பேறுபெற்றோர்” ஆவோம்.
மன்றாட்டு
இறைவா, உம்மில் நம்பிக்கைகொள்வோரை நீர் ஒருபோதும் கைவிடுவதில்லை என உணர்ந்து வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.
~அருட்திரு பவுல் லியோன் வறுவேல்