உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்
கடவுள் மோசே வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு பத்து கட்டளைகளை வழங்கினார். இந்த கட்டளைகள் பத்து கட்டளைகளாக தரப்பட்டிருந்தாலும், அந்த கட்டளைகள் காட்டும் நெறிமுறைகளாக நாம் பார்ப்பது ஒன்றே ஒன்று தான். அதுதான் அன்பு. இந்த அன்பு என்கிற நெறிமுறையின் அடிப்படையில் தான் அனைத்து கட்டளைகளும் வகுக்கப்பட்டிருக்கின்றன என்பதை நம்மால் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும்.
உதாரணமாக, “களவு செய்யாதிருப்பாயாக” என்பது பத்துக்கட்டளைகளுள் இருக்கக்கூடிய ஒரு கட்டளை. வெளிப்படையாக இது அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது என்பதாக இருந்தாலும், சற்று ஆழமாக நாம் சிந்தித்துப்பார்க்கிறபோது, அதனுள் இருக்கிற உண்மையான பொருளை நாம் உணர்ந்து கொள்ள முடியும். ஒரு பொருளை உழைத்து ஒருவர் சம்பாதிக்கிறார். அந்த பொருள் அவருக்குரியது. அவருடைய உழைப்பில் நாம் பெறக்கூடியது. மற்றவரின் பொருளை நாம் திருடுகிறபோது, அவரிடத்தில் நமக்கு அன்பு இல்லை என்பதுதான் உண்மையான அர்த்தம். அந்த மனிதரிடத்தில் நமக்கு அன்பு இருந்திருந்தால், நிச்சயம் நாம் அதை எடுக்க நமது மனம் ஒப்புக்கொள்ளாது. நம்முடைய பொருளை நாமே திருட மாட்டோம். ஏனென்றால், அந்த அளவுக்கு நம்மை, நமது உணர்வுகளை நாம் அன்பு செய்கிறோம். ஆனால், களவு செய்கிறபோது, அன்பு என்கிற உணர்வு இல்லாமல், சுயநலம் மட்டும் தான் அங்கே மிகுந்து காணப்படுகிறது. ஆக, வெறுமனே கட்டளைகளைக் கட்டளைகளாகப் பார்க்காமல், அது நமக்கு உணர்த்தக்கூடிய உண்மையான நெறிகளை நாம் ஏற்று வாழ வேண்டும். அப்படிப்பட்ட வாழ்க்கைகள் வழிநடத்த கடவுளிடம் வேண்டப்படுகிற பாடல் தான், இந்த திருப்பாடல் (திருப்பாடல் 119: 12, 16, 18, 27, 34, 35).
இன்றைக்கு நமது வாழ்வில் “அன்பு“ என்கிற இந்த வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக்கொண்டால், கடவுளின் அருள் நிச்சயம் நம்மோடு என்றும் தங்கியிருக்கும். அந்த அன்பு என்கிற கட்டளையை நமது வாழ்வாக ஏற்று வாழ்வதற்கு, நாம் மன்றாடுவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்