உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்
தியானப்பாடல் சிந்தனை : திருப்பாடல் 110: 1 – 2, 3, 4
இந்த திருப்பாடலில் ”ஆண்டவர், என் தலைவரிடம்..” என்ற வரிகள் யாரைச் சுட்டிக்காட்டுகிறது? என்ற கேள்வி இயல்பாகவே நமக்குள்ளாக எழுகிறது. இதற்கு பலதரப்பட்ட விளக்கங்கள தரப்பட்டாலும், மெசியா தான் இங்கே குறிப்பிடப்படுகிறார் என்று சொல்வது, சற்று பொருத்தமானதாக இருக்கிறது. ஏனென்றால், வலது பக்கம் என்று சொல்லப்படுவது, அரியணையின் முக்கியத்துவத்தை, வாரிசைக் குறிப்பிடுகிற சொல்லாக நாம் பார்க்கலாம். ஆக, மெசியா வருகிறபோது, இந்த உலகத்தில் ஏற்படும் மாற்றங்களை இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்துகிறது.
ஆண்டவருடைய துணைகொண்டு, மெசியா இந்த உலகத்தை வழிநடத்துவார். அவர் வழியாக இந்த உலகத்தில் நிகழக்கூடிய தீமைகளை அழித்து ஒழிப்பார். எதிரிகளிடையே அவர் ஆட்சிசெய்வார். அந்த நாட்களில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். இந்த முன்னறிவிப்பு இன்றைய நற்செய்தியிலும், கடந்த வாரத்தில் நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தியிலும் நடப்பதை நாம் பார்க்கலாம். இயேசு தான் வரவிருந்த மெசியா என்பதற்கான பல்வேறு நிகழ்வுகள் நற்செய்தி நூல்களில் நமக்கு தரப்பட்டது. இன்றைய நற்செய்தியிலும், இயேசு சூம்பிய கையுடைய மனிதருக்கு சுகம்கொடுத்தது, எந்தளவுக்கு மெசியா வல்லமையுள்ளவர் என்பதை வெளிப்படுத்துகிறார். இருளின் ஆட்சிக்கு முடிவுகட்டும் விதமாக, அவரது நடவடிக்கைகள் அமைந்திருப்பதை பார்க்கலாம்.
நமது வாழ்க்கையில் நாமும் தவறுகளுக்கு எதிராக, அநீதிகளுக்கு எதிராக நாம் போராட வேண்டும். இருளின் ஆட்சிக்கு துணைபோகாது, எந்நாளும் தீமைக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுக்க, ஆண்டவரின் அருள் வேண்டி, இந்த திருப்பாடலை தியானிப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்