உம் ஆற்றலைவிட்டு நான் எங்கு செல்லக் கூடும்?
திருப்பாடல் 139: 7 – 8, 9 – 10, 11 – 12
இறைவன் நம்மை முழுமையாக அறிந்திருக்கிறார் என்பதுதான் இந்த திருப்பாடல் வழியாக ஆசிரியர் சொல்ல வருகிற செய்தியாகும். நம்மைப் பற்றி நாம் அறிந்ததை விட, நம்மைப்பற்றி நம்முடைய உறவுகள் அறிந்ததை விட, இறைவன் முழுமையாக அறிந்திருக்கிறார். நம்முடைய வாழ்க்கையில் நாம் எதைச்செய்தாலும் கடவுளின் பார்வையிலிருந்து தப்பிவிட முடியாது. ஏனென்றால், ஆண்டவர் எப்போதும் நம்மை உற்று நோக்கிக் கொண்டேயிருக்கிறார்.
தாவீது அரசர் பத்சேபாவோடு தவறு செய்கிறார். தான் செய்கிற தவறை யாரும் உணராதவாறு, அவருடைய கணவரை கொன்றுவிடுகிறார். அரசர் என்கிற தற்பெருமை, செய்கிற தவறை மற்றவர்களிடமிருந்து மறைத்த செருக்கு அவரிடத்தில் இருக்கிறது. தன்னைப்பற்றி கர்வம் கொள்கிறார். ஆனால், இறைவன் நாத்தான் இறைவாக்கினர் வாயிலாக அவருக்கு அழிவின் செய்தியை அறிவிக்கிறார். கடவுள் முன்னிலையில் தாவீது செய்த தவறு அவருக்கு உணர்த்தப்படுகிறது. இதுவரை தனக்கு நிகரில்லை என்ற மமதை கொண்டிருந்த தாவீது மனம் வருந்துகிறார். தான் செய்த தவறை நினைத்து, கடவுளிடம் மன்னிப்பு வேண்டுகிறார்.
நம்முடைய வாழ்வில் கடவுளிடமிருந்து நாம் எதையும் மறைக்க முடியாது. கடவுள் நமக்கு உதவுவதற்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறார். அதேவேளையில் கடவுளிடமிருந்து நாம் எதையும் மறைத்து விடலாம் என்று நினைத்தால், அது நம்முடைய அறிவீனம் என்பதை நாம் உணர வேண்டும். கடவுள் முன்னிலையில் உண்மையுள்ளவர்களாக வாழ்வோம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்