உமது பேரன்பின் பெருக்கினால் எனக்கு பதில் தாரும்
திருப்பாடல் 69: 29 – 30, 32 – 33, 35 – 36
ஒரு சிலர் நன்றியை மறந்தவர்கள், வாழ்க்கையில் துன்பப்படுகிறபோது, மீண்டுமாக தங்களுக்கு உதவி செய்தவர்களிடம் செல்ல வேண்டும் என்கிறபோது, அது எளிதானதல்ல என்பதை நாம் அறிந்தவர்களாக இருக்கிறோம். ஏனென்றால், அவருடைய நன்றியை மறந்திருக்கிற நாம், நல்ல நிலையில் இருக்கிறபோது, அவர்கள் செய்த உதவியைப் பொருட்டாத எண்ணாத நாம், மீண்டும் அவர்களிடம் கையேந்துகிற நிலை வருகிறபோது, நிச்சயம் அது கடினமான ஒன்று. அவமானப்பட வேண்டிய ஒன்று. இன்றைய திருப்பாடலின் களம் இதுதான்.
இறைவனிடம் எல்லா நன்மைகளையும் பெற்று, அவருடைய நன்றியை மறந்துவிட்டு, இப்போது மீண்டும் கடவுளிடத்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறபோது பாடப்பட்ட பாடலாக இது அமைந்திருக்கிறது. கடவுளிடம் தான் உதவியை எதிர்பார்க்க தகுதியற்ற நிலையில் இருந்தாலும், கடவுளின் அன்பில் நம்பிக்கை வைத்து ஆசிரியர் தன்னுடைய உணர்வுகளை பதிவு செய்கிறார். இறைவனிடத்தில் கேட்கிறபோது, நிச்சயம் தனக்கு பதில் சொல்வார் என்பதில், ஆசிரியர் முழுமையான நம்பிக்கை வைத்திருக்கிறார். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடு தான் இந்த பாடல்.
இறைவன் நம்முடைய குற்றங்களை எண்ணிப்பார்க்காமல், அவர் நம்முடைய துன்பங்களுக்கும், பிரச்சனைகளுக்கும் விடை தரக்கூடியவராக இருக்கிறார். இறைவனின் இந்த அன்பை நம்முடைய வாழ்வில் முழுமையாக எண்ணிப்பார்க்கிறவர்களாக, நம்முடைய வாழ்வை நாம் அமைத்துக்கொள்வோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்