உமது திருவுளம் நிறைவேற்ற கடவுளே இதோ வருகின்றேன்
திருப்பாடல் 40: 1 – 3, 6 – 7, 9 – 10
விருப்பம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. நமது விருப்பத்தை நிறைவேற்ற நாம் முயற்சி எடுக்கிறோம். எல்லா விருப்பங்களையும் நிறைவேற்ற முடியுமா? எல்லா விருப்பங்களும் நிறைவேற்றுவதற்கு தகுதியானதா? நிச்சயம் இல்லை. மனம் ஒரு குரங்கு என்று சொல்வார்கள். மனம் நினைப்பதையெல்லாம் நாம் நிச்சயம் நிறைவேற்ற முடியாது. அப்படி நிறைவேற்றினால் அதில் 90 விழுக்காடு தவறான காரியமாகத்தான் இருக்கும். ஏனென்றால், நாம் நமது மனதைக் கட்டுப்படுத்தவில்லையென்றால், அது தன்போக்கில் சென்று, பல தவறுகளுக்கு வழிவகுத்துவிடும். இந்த நிலையை தாவீது அரசர் அறியாதவரல்ல. அவர் ஏற்கெனவே பத்சேபா விஷயத்தில் அனுபவப்பட்டிருக்கிறார்.
இந்த திருப்பாடல், உள்ளத்தில் எழுந்திருக்கிற ஒருவிதமான சோதனையை வென்று, மகிழ்ச்சியின் நிறைவில் வெளிப்படக்கூடிய திருப்பாடல். தாவீது அரசருக்கு ஒருவிதமான சோதனை. தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்கிற நெருடல் மனதிற்குள்ளே அரித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அது தவறானது என்பதை, அவரது அறிவு உணர்த்துகிறது. அறிவுக்கும், உணர்வுக்குமான போராட்டம். இந்த போராட்டத்தில் அவர், தன்னுடைய விருப்பத்தை அல்ல, மாறாக, எது சரியானதோ, அதனை தேர்ந்துகொள்கிறார். அது கடவுளின் விருப்பம் என்று நினைக்கிறார். அந்த சோதனையை வென்றுவிட்ட மகிழ்ச்சியில், தன்னுடைய சோதனையை வெல்வதற்கு உறுதுணையாக இருந்த கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார். அதனை திருப்பாடலாக எழுதுகிறார்.
நமது வாழ்க்கையிலும் சோதனைகள் வருகிறபோது, சோதனைகளுக்கு பலியாகிவிடாமல், துணிவோடு அதனை எதிர்த்து, வெற்றிபெறக்கூடிய ஆற்றலை கடவுளிடம் கேட்போம். சோதனைகளை வெல்லக்கூடிய துணிவை ஆண்டவர் தாமே, நமக்கு அருளட்டும்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்