உப்பாக .. ஒளியாக.
உப்பு, உவர்ப்பு தன்மையும்; ஒளி, ஒளிர்விக்கும் தன்மையும் கொண்டது. தன்னுடைய குணத்தை செயல்படுத்துவதில் உப்பும் ஒளியும் ஒன்றுக்கொன்று ஈடு இணையானது. உப்பு, இருந்த இடத்தில் இருந்துகொண்டு, அது எவ்வளவு கடினமான இடமாக இருந்தாலும் தன்னைக் கரைத்து கசியவைத்து, தன் உவர்ப்புத் தன்மையை உட்புகுத்திவிடும். அதுபோல ஒளியும் தன் ஒளிக் கதிரை ஊடகங்கள் வழியாக ஒளி ஊடுறுவல்,ஒளி விலகல், ஒளி முறிவு, ஒளிச் சிதரல், ஒளி பிரதிபலித்தல் இப்படி எப்படியாவது தன் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். நீங்கள் உப்பு, நீங்கள் ஒளி. உங்கள் தாக்கத்தை நீங்கள் வாழும் சமுதாயத்தில் ஏற்படுத்துங்கள்.
உப்பைப்போல ஒளியைப்போல தன் நிலையில் திருப்தியடைய வேண்டும். ஆகா நான் உவர்ப்பாக அல்லவா இருக்கிறேன்; அடடா நான் வெப்பமாக அல்லவா இருக்கிறேன் என்று விரக்தியோ வேதனையோ அடையக் கூடாது. பாகற்காய் கசப்பாக இருப்பதில்தான் அதன் பெருமை. மாம்பழம் இனிப்பாக இருப்பதுதான் அதற்குச் சிறப்பு. இருப்பதில் திருப்தியடைந்து, நம்மிடம் இருக்கும் நம் தன்மையை எல்லோருக்கும் வழங்க வேண்டம். எல்லோருக்கும் எல்லாம் தேவைப்படும். ஆகவே சமூக முன்னேற்றத்திற்கு உங்களின் பங்களிப்பும் தேவைப்படுகிறது.
கிறிஸ்தவன், கத்தோலிக்கன் தனக்கென ஒரு தனித்தன்மை கொண்டு, உப்பாகவும் ஒளியாகவும் செயல்பட அழைக்கப்பட்டுள்ளான். தன் தனித்தன்மையைப் புகுத்தி எங்கும் எதிலும் தன் கத்தோலிக்கத்தின் மாண்பினை மிளிரச் செய்வதற்குப் பதிலாக, தன் இயல்பை இழந்துவிட்டால் அவன் இகழ்ச்சியடைவான். ஈடு கொடுக்க முடியாமல் இன்று பெந்தகோஸ்தே கூட்டங்களிலும் பிரிவினைச் சபைகளிலும் சேரும் கத்தோலிக்கன் உவர்ப்பற்ற உப்பு; மரக்காலுக்குள் வைக்கப்பட்ட விளக்கு. விளக்குத் தண்டின் மேல் வைக்கப்பட்ட விளக்காக வாழ்வோம்.இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்; செபிக்கிறேன்.
–அருட்திரு ஜோசப் லியோன்