உன் உள்ளத்து விருப்பங்களை ஆண்டவர் நிறைவேற்றுவார்
திருப்பாடல் 37: 3 – 4, 18 – 19, 27 – 28, 39 – 40
கடவுளிடமிருந்து நிறைவான ஆசீர்வாதங்களைப் பெற விரும்பும் ஒரு மனிதருடைய வாழ்க்கை எப்படி அமைந்திருக்க வேண்டும்? என்பதற்கு இன்றைய திருப்பாடல் சிறந்த சான்றாக அமைகிறது. இது வெறும் வார்த்தையாக எழுதப்பட்டது அல்ல. தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தைக்கொண்டு எழுதப்பட்ட அமுதமொழிகள். இன்றைக்கு பெரும்பாலான மனிதர்கள், வெகு விரைவில் கடவுள் மீதான தங்களது நம்பிக்கையை இழந்துவிடுகிறார்கள். அதற்கு காரணம், தாங்கள் கேட்டது கிடைக்கவில்லை என்கிற அற்ப எண்ணம். தான். கடவுள் மீது வெறுப்பு கொள்வதற்கு பதிலாக, நம்முடைய வாழ்வை நாம் சற்று சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
கடவுளின் அருளை நிறைவாகப் பெற்றுக்கொள்ள நாம் செய்ய வேண்டியது, முதலில் அவரை நம்ப வேண்டும். அதைத்தான் இன்றைய முதல் அனுபல்லவி நமக்கு அறிவுறுத்துகிறது, ”ஆண்டவரை நம்பு”. இந்த நம்பிக்கை வெறும் நம்பிக்கையாக இல்லாமல், இறைவனை முழுமையாக அனுபவிக்கக்கூடிய உறுதி உள்ளமாக இருக்க வேண்டும். நம்பிக்கை மட்டுமல்லாது, நன்மையான காரியங்களைச் செய்ய வேண்டும், ”நலமானதைச் செய்”. அதாவது, நமது எண்ணங்களும், சிந்தனைகளும் கடவுளுக்கு உகந்ததாய் அமைந்திருக்க வேண்டும். அது செயல்பாட்டில், மனிதர்களுக்கு உதவி செய்வதாய் இருக்க வேண்டும். நாம் இறைவன் மீது வைத்திருக்கிற நம்பிக்கையை வாழ்வாக்குவதிலும், அதிக முயற்சி எடுக்க வேண்டும், ”நம்பத்தக்கவராய் வாழ்”. இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்கிறபோது, நிச்சயம் இறைவனுடைய அளப்பரிய அன்பு நம்மை நிறைவாக்குகிறது.
இறைவனிடமிருந்து அன்பு பெறாததற்கு, இறைவன் மீது வெறுப்பு கொள்ளாமல், இறைவனுடன் நமது உறவை அதிகப்படுத்த, ஆழப்படுத்த இறைவனிடம் வேண்டுவோம். அந்த உறவு, இறை வல்லமையை நமக்கு கொண்டுவரும் ஆயுதமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்