உன்னத இறைவார்த்தை
இன்றைய நற்செய்திப்பகுதியில் வருகிற விதைப்பவர் உவமை பாலஸ்தீனப்பகுதியில் வாழ்ந்த அனைத்து மக்களுக்கும் தெரிந்த ஒரு பிண்ணனியைக் கொண்டதாக இருக்கிறது. பொதுவாக பாலஸ்தீனத்தில் விதைகளை விவசாயிகள் இரண்டு விதமாக விதைத்தனர். நிலத்தில் இறங்கி விதைகளைத்தூவுவது முதல் முறை. ஆனால், சற்று சோம்பேறித்தனமாக என்றால், ஒரு கழுதையின் மீது விதைப்பையை வைத்து, இரண்டு பக்கங்களிலும் சிறிய துளையிட்டு, கழுதையை நிலம் முழுவதும் நடக்கச்செய்வது இரண்டாம் முறை. ஆனால், இரண்டாம் முறை வெகு அரிதாக இருந்தது.
இயேசுவின் இந்தப்போதனை இரண்டு அடித்தளத்தை உள்ளடக்கியது. முதலாவது, இறைவார்த்தையைக் கேட்பவர்களுக்கு. இறைவார்த்தையை கேட்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை எவை என்பது பற்றியதாகும். இறைவார்த்தை நமக்கு தரப்படுவது மிகப்பெரிய கொடையாகும். அது கிடைப்பதற்கு அரிய பொக்கிஷமாகும். அதை நாம் கேட்டு, உணர்ந்து நமது வாழ்வாக்க வேண்டும். இரண்டாவது இறைவார்த்தையைப் போதிப்பவர்களுக்கு உள்ளதாகும். இறைவார்த்தையைப் போதிப்பதும் சாதாரண, எளிய பணியல்ல. அது ஒரு கொடையாக இருந்தாலும், மிகப்பெரிய பொறுப்பாகும். அந்தப் பொறுப்பை செயல்படுத்துவதற்கு நல்லமுறையில் நம்மைப்பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்றைய நாட்களில் இறைவார்த்தை நமக்கு பல வடிவங்களில், பல நிகழ்வுகளில் தரப்படுகிறது. திருவிழாக்களில் பத்துநாட்களும் பல அருட்தந்தையர்கள் பங்கிற்கு வரவழைக்கப்பட்டு, பல இறைச்சிந்தனைகள் தரப்படுகிறது. ஆண்டுதோறும் தவக்காலங்களில் தியானங்கள் நடத்தப்படுகிறது. அவையெல்லாம் என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துகிறதா? சிந்திப்போம். மாற்றம் ஏற்படுத்த நம்மையே இறைவார்த்தைக்கு அர்ப்பணமாக்குவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்