உதவி செய்வோம்
இயேசுவைப்பற்றிய செய்தி சுற்றுப்புறமெங்கும் பரவிக்கொண்டிருந்தது. அவருடைய வல்லமை, நோயாளர்களைக் குணமாக்கும் ஆற்றல், அதிகாரம் மக்கள் மத்தியில் பிரபலமாகிக்கொண்டிருந்தது. அதை நிச்சயமாக மறைத்து வைக்க முடியாது என்கிற அளவுக்கு, மக்கள் இயேசுவைத்தேடி வர ஆரம்பித்தனர். இயேசு பேதுருவின் இல்லத்தில் இருப்பதைக்கேள்விப்பட்டு, ஓய்வுநாள் முடிகின்ற நேரத்திற்காக காத்திருந்து, ஓய்வுநாள் முடிந்தவுடன், நோயாளர்களை இயேசுவிடம் கொண்டு வருகிறார்கள்.
மூன்று இடங்களில் இயேசு பொதுவாக நோயாளர்களைக் குணப்படுத்துகிறார். 1. தொழுகைக்கூடம் 2. நண்பர்களில் இல்லம் 3. தெரு வீதி. எங்கே இயேசுவின் உதவி தேவை என்றாலும், அங்கே உதவி செய்வதுதான் இயேசுவின் பணியாக இருந்தது. மனிதத்தேவையை நிறைவேற்றுவதற்கு, அவர் நாளோ, நேரமோ, இடமோ, ஆளோ பார்க்கவில்லை. தேவையைப்பூர்த்தி செய்வதில் கவனத்தோடு இருந்தார். தேவையில் இருக்கிற ஒவ்வொருவருக்கும் தனது உதவி கிடைக்க வேண்டும் என்பதில் இயேசு உறுதியா இருப்பதை இன்றைக்கு நற்செய்தி தெளிவாக்குகிறது.
உதவி என்பது நாளோ, இடமோ, ஆளோ பார்த்து செய்வதல்ல. தேவையை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும். உதவி செய்வதற்கு நமக்கு எதுவும் தடையாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், எதையும் சந்திக்க நாம் தயாராக இருக்க வேண்டும். இல்லையென்றால், அது உதவியாக இருக்க முடியாது.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்