உதவி
இயேசு சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அவரைப்பின்தொடர்கிறது. தங்களுக்குத் தேவையானது இயேசுவிடத்தில் இருக்கிறது, அதை எப்படியாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று, இயேசுவைப்பின்தொடர்ந்து கூட்டம் சென்று கொண்டிருக்கிறது. தன்னைத் தேடிவந்த அனைவருக்கும் இயேசு உதவி செய்கிறார். நற்செய்தியாளர்கள் இயேசுவைப்பற்றி சொல்கிறபோது, அவர் சென்ற இடங்களில் எல்லாம், நன்மைகளைச் செய்தார் என்பதை வாசிக்கிறோம். இயேசு மக்களுக்கு உதவியாக இருக்கிறார்.
உதவி என்பது உறுதுணையாக இருப்பது, தேவையறிந்து செய்வது, பயனுள்ளதாக இருப்பது என நாம் பொருள் கூறலாம். எது உண்மையான உதவி? இயல்பாகச் செய்வது, தேவையறிந்து செய்வது, பரிவுணர்வுடன் மகிழ்ச்சியாகச் செய்வது மற்றும் எல்லாச் சூழ்நிலைகளிலும் செய்வது. இதுதான் உண்மையான உதவி. இயேசுவின் உதவி இயல்பாக இருக்கிறது. யோசித்து, தியானித்து இதில் எனக்கு ஆதாயம் இருக்கிறதா? இதில் எனக்கு இடஞ்சல் ஏதாவது இருக்கிறதா? என்று எண்ணி செய்வதல்ல உதவி. செய்ய வேண்டுமென்பதற்காக செய்வதல்ல, தேவையறிந்து செய்வதுதான் உதவி. அது வெறுப்புணர்வோடு செய்யப்படுவதாக இருக்கக்கூடாது. பரிவு உணர்வுடன் கூடியதாக, மகிழ்ச்சியோடு செய்யப்படுவதாக இருக்க வேண்டும். எந்த நேரத்திலும், எல்லாச்சூழ்நிலைகளிலும் அது செய்யப்படுவதாக இருக்க வேண்டும். பணிவாழ்வின் களைப்போ, சுமையோ இயேசுவுக்கு உதவி செய்வதற்கு தடையாக இல்லை.
நாம் செய்யக்கூடிய உதவி எப்படிப்பட்டதாக இருக்கிறது? ஆதாயம் பெறுவதாக இருக்கிறதா? சுயநலத்திற்காக, சுய இலாபத்திற்குச் செய்யப்படுவதாக இருக்கிறதா? தற்பெருமைக்காகச் செய்யப்படுவதாக இருக்கிறதா? அல்லது உண்மையிலே இயற்கையின் உந்துதலால், இயல்பானதாகச் செய்யப்படுவதாக இருக்கிறதா? சிந்திப்போம். உண்மையான உதவியாக இருப்பதற்கு முயற்சி எடுப்போம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்