உண்மை – தூய ஆவியாரின் உறைவிடம்
திருத்தூதர் பணி 7: 51 – 8: 1
ஸ்தேவான் கடுமையான வார்த்தைகளால் மக்களையும், மூப்பர்களையும், மறைநூல் அறிஞர்களையும் சாடுகிறார். அவருடைய கடுமையான வார்த்தைகளுக்கு காரணம் இல்லாமல் இல்லை. அவர்கள் அனைவரும் மாசற்ற இயேசுவைக் கொலை செய்துவிட்டார்கள் என்பது தான். ஸ்தேவானின் பார்வையில், இயேசுவைக் கொலை செய்தது தற்செயலாக நடந்திருக்கவில்லை. இவர்கள் அனைவருமே குற்றப்பிண்ணனியோடு தான் இருந்திருக்கிறார்கள். ஏனென்றால், இயேசுவுக்கு முன்பிருந்த இறைவாக்கினர்களைக் கொன்றார்கள். இறைவாக்கினர்க்கெல்லாம் இறைவாக்கினராக இருந்த இயேசுவையும் கொன்றார்கள். ஆக, கொலை செய்வது என்பது அவர்களுக்கு புதிதானது அல்ல. அது மட்டுமல்ல, அத்தோடு அவர்கள் நிற்கப்போவதில்லை. இவற்றை எடுத்துரைக்கின்ற தன்னையும் கொலை செய்ய இருக்கிறார்கள், என்று தன்னுடைய சாவை ஸ்தேவான் முன்னறிவிக்கின்றார். ஸ்தேவானின் போதனையைக் கேட்டவர்களின் பதில்மொழி என்ன? ”அவரைப் பார்த்துப் பற்களை நறநறவென்று கடித்தார்கள். இவ்வளவுக்கு வஞ்சக எண்ணமும், பகைமை உணர்வும் அவர்களது உள்ளத்தில் எழக்காரணம் என்ன?
தூய ஆவி இல்லாத நிலை தான், அவர்களின் பழிவாங்கும் எண்ணத்திற்கு அடிப்படை காரணம். மனிதன் இயல்பாகவே தூய ஆவியைப் பெற்றிருக்கிறான். ஆனால், அந்த தூய ஆவி இல்லாத நிலையை அவனே ஏற்படுத்திவிடுகிறான். இந்த வாசகத்தில், அனைவருமே தவறு செய்திருக்கிறார்கள். அந்த தவறு சுட்டிக்காட்டப்படுகிறபோது, அதனை ஏற்று, தங்களது வாழ்வை மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிற மனமாற்றம் அவர்களுக்குள்ளாக வரவில்லை. மாறாக, அவர்களுக்குள்ளாக இருக்கிற வெறுப்புணர்வு அதிகரிக்கிறது. அந்த வெறுப்புணர்வு தூய ஆவி இல்லாத நிலையை உருவாக்கிவிடுகிறது. ஸ்தேவான் கடவுளின் வார்த்தைகளை துணிவோடு அறிவிக்கின்றார். காரணம், அவர் தூய ஆவியின் வல்லமையை நிறைவாகப் பெற்றிருந்தார். உண்மை இருக்கிற இடத்தில் தூய ஆவி இருக்கின்றார்.
நம்மிடத்தில் உண்மை இருக்கிறபோது, இயல்பாகவே துணிவு வருகிறது. ஏனெனில் அங்கே தூய ஆவியானவர் இருக்கின்றார். உண்மையை ஏற்றுக்கொள்ளாதவர்களிடத்தில் பகைமையும், வெறுப்பும் நிறைந்திருக்கிறது. காரணம், அங்கு தூய ஆவியானவர் இல்லை. உண்மைக்கு சான்று பகர்கிறவர்களாக வாழ்கிறபோது, நம்மிடத்தில் தூய ஆவியானவர் இருப்பார். எனவே, நம்முடைய வாழ்வில் எல்லா தருணத்திலும், சூழ்நிலையிலும், உண்மைக்கு சான்று பகரக்கூடியவர்களாக வாழ்வோம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்