உண்மை கிறிஸ்தவர்களாக வாழ…
ஒரு மரம் அதன் கனியால் அறியப்படுகிறது என்பது, யூதர்கள், கிரேக்கர்கள் மற்றும் உரோமையர்கள் ஏற்றுக்கொண்ட பொது சிந்தனை. மத்திய கிழக்குப்பகுதிகளில் “வேரைப்போல அதன் கனி” என்கிற பழமொழி மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. இன்றைய நற்செய்தியில் இயேசு ”முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையோ பறிக்க முடியுமா?” என்று கேட்கிறார். முட்செடிகளுக்கும் திராட்சைப்பழங்களுக்கும் என்ன தொடர்பு? முட்பூண்டுகளுக்கும், அத்திப்பழங்களுக்கும் என்ன ஒற்றுமை?
பாலஸ்தீனப்பகுதியில் ஒரு சில முட்செடிகள், சிறிய பழங்களைக் கொண்டிருந்தது. அது திராட்சைப் பழங்களைப் போன்ற தோற்றம் உடையதாக இருந்தது. அதேபோல முட்பூண்டுகளில் இருக்கும் பழங்கள், அத்திப்பழங்களை நினைவுபடுத்துவது போன்று இருந்தது. எவ்வளவுதான் அவைகள் தோற்றத்தில், திராட்சைப் பழங்களையும், அத்திப்பழங்களையும் நினைவுபடுத்துவது போல இருந்தாலும், அவைகள் திராட்சைப்பழங்களாகவோ, அத்திப்பழங்களாகவோ மாறிவிட முடியாது. அதேபோலத்தான் போலி இறைவாக்கினர்களும். அவர்கள் இறைவாக்கினர்களைப் போல உடையில் காணப்பட்டாலும், அவர்கள் இறைவாக்கினர்கள் ஆகிவிட முடியாது. எனவே, அவர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்க, இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார்.
கிறிஸ்தவர்களாக வெறும் தோற்றத்தில் இருந்தால் அதனால் பலன் ஒன்றுமில்லை. வெறும் அருள் அடையாளங்களைப் பெற்றுக்கொள்வதால், நாம் கிறிஸ்தவர்களாக மாறிவிட முடியாது. மாறாக, கிறிஸ்துவை நமது வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும். கிறிஸ்தவ மதிப்பீடுகளை நமது வாழ்வாக்க வேண்டும். அதுதான் கடவுளுக்கு ஏற்புடையவர்களின் வாழ்வாக இருக்க முடியும்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்