உண்மையும், பிரமாணிக்கமும் உள்ளவர்களாக…….
இஸ்ரயேல் மக்கள் மத்தியில் மோசே மிகப்பெரிய இறைவாக்கினராகக் கருதப்பட்டார். அவருக்கு மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு இருந்தது. மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவைப் புதிய மோசேயாக அறிமுகப்படுத்துவதை அவருடைய நற்செய்தியில் நரம் பார்க்கலாம். மோசேயின் குழந்தைப்பருவ நிகழ்ச்சிகளை இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளோடு ஒப்பிடுவதிலும் சரி, பத்து கொள்ளை நோய்களுக்கு மாற்றாக, இயேசு செய்த அற்புதங்களும் சரி, இயேசு “புதிய மோசே“ என்ற சிந்தனையை, மத்தேயு நற்செய்தியாளர் ஆணித்தரமாகத் தருகிறார்.
இந்த வரிசையில் பழைய ஏற்பாட்டை முழுமையாக்கவும், நிறைவேற்ற வந்தவராகவும் இயேசுவை அவர் சித்தரிக்கிறார். எனவே தான் மத்தேயு நற்செய்தியில் “இவ்வாறு மறைநூல் வாக்கு நிறைவேறியது” என்ற சொல்லாடல் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பழைய ஏற்பாட்டில் இறைவாக்கினர்களால் முன்சொல்லப்பட்டதை இயேசு எவ்வாறு நிறைவேற்றுகிறார் என்ற பாணியில், மத்தேயு நற்செய்தியாளர் உண்மையில் அதிக சிரத்தை எடுத்து தனது நற்செய்தியை எழுதியிருக்கிறார். மத்தேயுவின் இந்த நற்செய்தி நமக்கு தரும் செய்தி, கடவுள் தனது வாக்குறுதியை நிறைவேற்றுகின்ற கடவுளாக இருக்கிறார் என்பதுதான். கடவுள் தான் இறைவாக்கினர் வாயிலாகச் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளையும் காலம் கனிகிறபோது நிறைவேற்றுகிறார்.
இறைவன் வாக்குறுதி மாறாதவர். அவர் தான் கொடுத்த வாக்குறுதிகளுக்கு பிரமாணிக்கமும், உண்மையும் உள்ளவராய் இருக்கிறார். அந்த வகையில் நாம் எந்த அளவுக்கு கடவுளிடம் கொடுத்த வாக்குறுதிகளுக்கு பிரமாணிக்கத்தோடு நடக்கிறோம் என சிந்திப்போம். எத்தனையோ வாக்குறுதிகளை கடவுளின் திருமுன்னிலையில் கொடுக்கிற நாம் அதற்கு உண்மையாக நடக்கிறோமா? சிந்திப்போம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்