உண்மையான விசுவாசம்
Success does not mean winning the battle, but winning the war – என்று பொதுவாகச் சொல்வார்கள். போர் என்பது பல நாட்களாக நடக்கக்கூடியது. அதிலே ஒருநாள் வெற்றிபெற்றால், எதிரியை விட சிறப்பாக செயல்பட்டால், அது உண்மையான வெற்றியல்ல. இறுதியாக யார் சிறப்பாகச் செயல்படுகிறார்களோ, எதிரியைத் தோற்கடிக்கிறார்களோ, அவர்கள் தான் வெற்றியாளர்கள். ஒரு விஞ்ஞானி தன்னுடைய கண்டுபிடிப்பிற்காக பலநாட்கள் செலவழிக்கிறார். அதிலே தோல்வி மட்டும் தான் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், திடீரென்று, இத்தனை நாட்களாக தான், எதற்காக உழைத்தோமோ அதனை அவர் சாதிக்கிறபோது, வெற்றி பெற்றுவிடுகிறார். இதுதான் வெற்றி. இதனை மையப்படுத்தி தான், இன்றைய வாசகங்கள் அமைந்திருக்கிறது.
இயேசுவின் வாழ்க்கை வெற்றியா? தோல்வியா? என்று யாரிடமாவது கேட்டால், அவரது இறப்பை வைத்து அதை தோல்வி என்று தான் சொல்வார்கள். அவர் அநீதியாக தீர்ப்பிடப்பட்டார் என்று தான் சொல்வார்கள். ஆனால், அது உண்மையல்ல. உயிர்ப்பு இயேசுவின் வெற்றியை எடுத்துச் சொல்கிறது. ஒருவேளை அவர் அநியாயமாகத் தீர்ப்பிடப்பட்டு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டிருந்தாலும், அவருடைய உயிர்ப்பு மிகப்பெரிய வெற்றியை நமக்கு எடுத்துச் சொல்கிறது. இதுதான் நமது கிறிஸ்தவ வாழ்விலும் நடக்க இருக்கிறது. உண்மையான விசுவாசத்தோடு நாம் வாழ்கிறபோது, பல வேளைகளில் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுவது போல இருக்கிறது. அந்த ஏமாற்றங்களின் நடுவில் நாம் பொறுமையாக இருக்கிறபோது, நிச்சயம் கடவுளின் ஆசீர்வாதம் நமக்கு நிறைவாகக் கிடைக்கிறது.
வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நாம் தோல்வியைச் சந்தித்தாலும், இறுதியில் மிகப்பெரிய வெற்றியை இறைவன் நமக்கு தர இருக்கிறார். அந்த வெற்றி யாரும் எதிர்பாராத மிகப்பெரிய வெற்றியாக இருக்கும். கடவுளிடம் நாம் கொண்டிருக்கிற விசுவாசத்தைக் காத்துக்கொள்வோம். அந்த விசுவாசம் நம்மை வழிநடத்தும்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்