உண்மையான வழிபாடு
உண்மையான வழிபாடு என்றால் என்ன? என்பதற்கு, இயேசு சமாரியப்பெண் உடனான இந்த உரையாடலில் நமக்குப் புரிய வைக்கிறார். சமாரியர்கள் முதல் ஐந்து புத்தகங்களை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், இறைவாக்கினர் நூல்களையோ, திருப்பாடலையோ ஏற்றுக்கொள்ளவில்லை. யூதப்போதகரின் கருத்துப்படி, சமாரியர்கள் மூடநம்பிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். அவர்களின் வழிபாடு பயத்தின் அடிப்படையில் அமைந்திருந்தது. அன்பின் அடிப்படையில் அல்ல. அவர்கள் வணங்கிய பல தெய்வங்களில் யாவே இறைவனும் இடம்பெற்றிருந்தார். அதுவும் பயத்தின் அடிப்படையில் தான்.
கடவுளை நாம் பயத்தின் அடிப்படையில் வணங்குவது சரியான வழிபாடாக இருக்க முடியாது. கடவுள் அன்புமிக்கவர். கடவுள் இரக்கமிக்கவர். கடவுள் நம்மை பயமுறுத்துகிறவர் கிடையாது. மாறாக, நாம் தவறு செய்தாலும், நம்மை தொடர்ந்து அன்பு செய்கிறவர். நம்மை வழிநடத்துகிறவர். கடவுள் அன்பானவர் என்ற நம்பிக்கை நமக்கு இருந்தால்தான், நாம் அவரை சுதந்திரமாக வழிபட முடியும். இறுக்கம் தளர்ந்து, உண்மையான மனத்தோடு. முழு ஆன்மாவோடு அவரை நாம் வழிபடுவோம். பயத்தின் அடிப்படையில் வழிபடுவது உண்மையான வழிபாடாக இருக்க முடியாது.
கடவுளைப்பற்றிய நமது வழிபாடு எப்படி இருக்கிறது? அது அன்பின் அடிப்படையில் அமைந்து இருக்கிறதா? இல்லையென்றால், அது பயத்தின் அடிப்படையில் அமைந்திருக்கிறதா? கடவுளின் அன்பிற்கும், இரக்கத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்போம். கடவுளின் அன்பை நாம் முழுமையாக உணர்வோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்