உண்மையான பங்கேற்பு
நாம் ஒவ்வொரு நாளும் செபிக்கிறோம். திருப்பலியில் பங்கு பெறுகிறோம். இறைவார்த்தையை வாசிக்கிறோம். ஆனால், அது உண்மையிலே நிறைவாக பங்கேற்ற உணர்வைத்தருகிறதா? பல வேளைகளில் நமது பதில் இல்லை. பல வேளைகளில் ஏதோ கடமைக்காக, வழிபாடுகளில் பங்கேற்கிறவர்களாகத்தான் இருந்திருக்கிறோம். அதே வேளையில், நமக்கு ஒரு கஷ்டம் என்று வைத்துக்கொள்வோம். ஆலயத்திற்குச் செல்கிறபோது, மிகவும் பக்தியாக உணர்கிறோம். சொல்லப்படுகிற இறைவார்த்தை நம் உள்ளத்தைத் தொடுவதாக இருக்கிறது. நாம் சொல்லும் செபம் அர்த்தமுள்ளதாக மாறுகிறது. ஒரே வழிபாடுதான். ஆனால், நமது மனநிலைதான் அதை வேறுபடுத்திக்காட்டுகிறது. இன்றைய நற்செய்தியில் அன்னை மரியாளின் பாடல்களும், இத்தகைய உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரக்கூடிய செபம் தான்.
1சாமுவேல் புத்தகம் 2: 1 – 10 ல் நாம் அன்னாவின் பாடலை வாசிக்கிறோம். ஏறக்குறைய, மரியாளின் பாடல், இதைத்தழுவியதாகத்தான் இருக்கிறது. கடவுளின் மகனைத்தாங்கப் போகிறோம் என்கிற பேரானந்தமும், தனது உறவினர் எலிசபெத்தம்மாளும் மலடி என்ற அவப்பெயரைத் துடைப்பதற்கு, இறைவன் கருணைபுரிந்திருக்கிறார் என்கிற உணர்வும், அவளுக்கு மகிழ்ச்சி நிறைந்த உணர்வைத்தந்திருக்க வேண்டும். அந்த உணர்வோடு இந்த பாடலைப் பாடுகிறார். தான் சொல்லக்கூடிய ஒவ்வொரு வரிகளையும் உணர்ந்து, துணிவோடு, மகிழ்ச்சியோடு, உள்ளப்பூரிப்போடு சொல்கிறார்.
நாமும் செபிப்பதற்கு ஆண்டவரின் ஆலயத்திற்குச் செல்கிறபோது, இத்தகைய உணர்வோடு செபிக்க வேண்டும். பங்கேற்க வேண்டும். அதற்கு நம்மையே நல்ல முறையில் தயாரிக்க வேண்டும். இன்றைக்கு வழிபாடுகள் நம்மைத் தொடவில்லை என்றால், அது வழிபாட்டின் குற்றமல்ல, நாம் நல்ல முறையில் தயாரிக்காமல் செல்வதுதான், அதற்கான காரணம். இன்றைக்கு திருப்பலி தொடங்குவதற்கு முன்பாக நடக்கும் செபங்களில் யாராவது அக்கறை கொள்கிறோமா? திருப்பலியின் தொடக்கத்தில் பங்கேற்க வேண்டும் என்ற மனநிலை இருக்கிறதா? விவிலியத்தை தாங்கி, அதற்கு செவிகொடுக்க வேண்டும் என்று நினைக்கிறோமா? தகுந்த தயாரிப்போடு வழிபாடுகளில் பங்குகொள்வோம்.
~அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்