உண்மையான தேடல்
மறைபொருள்(Mystery) என்கிற வார்த்தையின் பொருள் இங்கே கவனிக்கப்படத்தக்க ஒன்று. மறைபொருள் என்கிற வார்த்தையின் பொதுவான பொருள்: புரிந்து கொள்ள முடியாதது, புரிந்து கொள்வதற்கு வெகு கடினமானது. ஆனால், புதிய ஏற்பாட்டில் “மறைபொருள்“ என்கிற வார்த்தை பயன்படுத்தப்படுகின்ற அர்த்தம் சற்று வேறுபாடானது. மறைபொருள் என்பது குறிப்பிட்ட சிலருக்கு புரிந்து கொள்ளக்கூடியதும், சிலருக்கு புரிந்து கொள்ள இயலாததுமானதாகும். இந்த அர்த்தத்தில்தான் இங்கே பயன்படுத்தப்படுகிறது. யாருக்கு புரிந்து கொள்ள முடியும்? யாருக்கு புரிந்து கொள்ள முடியாது? தேடல் உள்ளவர்களுக்கு புரிந்து கொள்ள முடியும். தேடல் இல்லாதவர்களுக்கு புரிந்து கொள்ள முடியாது.
வாழ்வு என்பது ஒரு தேடல். ஒவ்வொரு நிமிடமும் நாம் தேடிக்கொண்டே இருக்கிறோம். தேடிக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால், எல்லாரும் இந்த தேடலில் ஈடுபடுகிறார்களா? என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறியே. இறையாட்சியைப்பற்றிய தேடல் உள்ளவர்களுக்கு இயேசு சொல்வதை நிச்சயம் புரிந்து கொள்ள முடியும். இறையாட்சியைப்பற்றிய கவலை இல்லாதவர்களுக்கு அதைப்பற்றிய புரிதல் நிச்சயம் இருக்க முடியாது. இயேசுவின் சீடர்கள் இயேசுவோடு இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு கிடைக்காத பாக்கியம் சீடர்களுக்கு கிடைத்திருக்கிறது. இயேசுவோடு இணைந்து தேடுவதுதான் அந்த பாக்கியம். அந்த தேடலில் இயேசுவின் உதவியும் அவர்களுக்கு இருக்கும் என்பது அதை விட சிறப்பு. அதைப்புரிந்து கொண்டு அவர்கள் வாழ்வின் தேடலில் இன்னும் அதிக அக்கறையோடு ஈடுபட வேண்டும் என்பது, இயேசு அவர்களுக்கு உணர்த்தும் செய்தி.
இறைத்துணை என்றும் நம்மோடு நமக்கு உதவி செய்வதற்கு காத்துக்கொண்டிருக்கிறது. அந்த உதவியோடு நமது வாழ்வின் இறையாட்சியைப்பற்றி தேடலில் முழுமையாக ஈடுபடுவோம். தேடல் என்பது எளிதானது அல்ல. ஆனால், உண்மையான முயற்சி செய்யும்போது, அது கடினமானதும் அல்ல. உண்மையான முயற்சியோடு ஆண்டவரைத்தேடுவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்