உண்மையான கிறிஸ்தவ வாழ்வு
இயேசு தனது போதனையில் திருமுழுக்கு யோவானைப்புகழ்ந்தது போல் வேறு யாரையும் புகழ்ந்திருக்க முடியுமா? என்றால் அது சந்தேகம் தான். அந்த அளவுக்கு, இயேசு திருமுழுக்கு யோவான் மேல் பாசமும், அன்பும், பற்றுதலும் கொண்டு விளங்கினார். திருமுழுக்கு யோவான் ஓர் இறைவாக்கினா். இறைவாக்கினர்களுக்கு இரண்டு கடமைகள் இருக்கிறது.
1. கடவுளை செய்தியைப்பெறுவது.
2. கடவுளின் செய்தியை துணிவோடு அறிவிப்பது. கடவுளின் ஞானத்தை எண்ணத்திலும், கடவுளின் உண்மையை தங்கள் உதட்டிலும், கடவுளின் துணிவை தங்கள் இதயத்திலும் ஏந்துகிறவர்கள் தான் இறைவாக்கினர்கள். அப்படிப்பட்ட உண்மையான இறைவாக்கினர் தான் திருமுழுக்கு யோவான்.
ஆனாலும், திருமுழுக்கு யோவானுக்கும், இயேசுவுக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. திருமுழுக்கு யோவானுடைய போதனை முழுவதும், மக்களைப் பயப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. ”விரியன் பாம்புக்குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்?”….”ஏற்கெனவே மரங்களின் வேரருகே கோடரி வைத்தாயிற்று”….”தம் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார். ஆனால், பதரை அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்”. ஆனால், இயேசுவின் போதனை, கடவுளின் அன்பைப் பறைசாற்றுவதாக இருந்தது. ”பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்”….”நீதிமான்களை அன்று, பாவிகளையே அழைக்க வந்தேன்”. இரண்டு பேரின் போதனைகள் வெவ்வேறாக இருந்தாலும், இரண்டு பேருமே மக்களை இறையாட்சிக்கு வருவதற்கு அழைப்பு விடுத்தவர்களாக இருந்தனர். இரண்டு பேருமே மக்களை மனம்திருப்புவதில் அதிக அக்கறை கொண்டவர்களாக இருந்தனர். அதற்கான அடிப்படைக்காரணம், இரண்டுபேருமே கடவுளில் தங்களது முழுமையான நம்பிக்கையை வைத்திருந்தனர்.
நமது வாழ்வில் நாம் கடவுள் விரும்பிய வாழ்வை வாழ வேண்டும். நமது வாழ்வும் நாம் கடவுள் மீது வைத்திருக்கிற விசுவாசத்தை வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும். அதுதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு. அத்தகைய விசுவாச வாழ்வை நாம் வாழ்வோம்.
~அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்