உண்மையான அர்ப்பண வாழ்வு
யோவானுடைய இறப்புச்செய்தியைக் கேட்டவுடன் இயேசு கலிலேயாவிலிருந்து புறப்பட்டு படகிலேறிப் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றதாக நற்செய்தியாளர் கூறுகிறார். அவர் தனிமையாக சென்றதற்கு பல காரணங்கள் இருக்கலாம். “தன்னுடைய உறவினர்“, “தனது முன்னோடி” திருமுழுக்கு யோவானுடைய அவருக்கு மிகப்பெரிய வருத்தத்தை உண்டாக்கியிருக்கலாம். எனவே, சற்று ஆறுதல் பெறுவதற்காக இந்த தனிமையை விரும்பியிருக்கலாம். அல்லது ஓய்வில்லாத பணிவாழ்வில் சிறிது இளைப்பாற விரும்பியிருக்கலாம். அல்லது பாடுகள் நெருங்குகின்ற வேளையில் தன் இறைத்தந்தையோடு ஒன்றித்திருக்க ஆசைப்பட்டிருக்கலாம். எது எப்படியென்றாலும், அவர் அந்த இடத்திற்கு தனிமையாக இருப்பதற்கு செல்வதற்கு முன்பே, மக்கள் அவர் அங்கே செல்வதைக்கேள்விப்பட்டு சென்றுவிட்டனர். இயேசு அவர்களைப்பார்த்து கோபப்படவில்லை. எரிச்சலடையவில்லை. எனக்கு ஓய்வுக்கு கூட நேரம் கொடுக்க மாட்டார்களா? என்று ஆதங்கப்படவில்லை. மாறாக, மக்கள் மீது பரிவு கொள்கிறார்.
பணிவாழ்வு என்பது நேரத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்வு அல்ல. எல்லா நேரமும் மக்களுக்காக பணியாற்ற தயாராக இருக்கக்கூடிய வாழ்வு. அதை இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோம். நமக்கான சொந்த வேலைகள் எவ்வளவோ இருக்கலாம். நமக்கென்று வாழ்வில் நிச்சயம் விருப்பு, வெறுப்புகள் இருக்கலாம். ஆனால், அது எந்தவிதத்திலும் நமது பணிவாழ்வைப் பாதிப்பதாக இருக்கக்கூடாது. நமது பணிவாழ்வில் நூற்றுக்கு நூறு விழுக்காடு அர்ப்பணத்தை வெளிப்படுத்த வேண்டும். ஆண்டவர் இயேசு கிறிஸ்து இதைத்தான் தன் வாழ்வில் செய்தார். அதையே தனது சீடர்களுக்கும் கற்றுத்தருகிறார்.
வாழ்வை மற்றவர்களுக்காக வாழும்போதுதான், வாழ்வு இனிக்கிறது. நிறைவாக இருக்கிறது. மகிழ்ச்சியைக்கொண்டு வருகிறது. அத்தகைய நிறைவைப்பெற, மகிழ்ச்சியைச் சுவைக்க அர்ப்பண உணர்வோடு வாழ்வோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்