உண்மையான அர்ப்பண வாழ்க்கை
எசாயா 6: 1 – 8
இறைவாக்கினர் எசாயாவின் அழைப்பு இன்றைய வாசகமாக நமக்குத் தரப்படுகிறது. இறைவாக்கினர் எசாயா, விண்ணகத்தில் கடவுளின் அரியணையில் நடக்கும், விவாதத்தைக் காட்சியாகக் காண்கிறார். இங்கு கடவுள் நேரடியாக இறைவாக்கினர் எசாயாவை அழைக்கவில்லை. ஆண்டவர் தன்னுடைய விண்ணகத் தூதர்களோடு பேசிக்கொண்டிருப்பதைக் கேட்ட எசாயா, “இதோ நானிருக்கிறேன்” என வினவுகிறார். எசாயாவின் இந்த ஏற்பு, மற்ற இறைவாக்கினர்களின் அழைப்போடு பொருத்திப் பார்க்கையில் சற்று மாறுபட்டதாக இருக்கிறது. உதாரணமாக, மோசே இறைவனால் அழைக்கப்படுகிறார். ஆனால், அந்த அழைப்பை முதலாவதாக மறுக்கிறார். இறைவாக்கினர் எசேக்கியலின் அழைப்பும் இதேபோல, எசேக்கியலால் முதலில் மறுக்கப்படுகிறது. ஆனால், எசாயா இறைவாக்கினர் உடனடியாக இறைவனின் அழைப்பை ஏற்றுக்கொள்கிறார்.
மற்றவர்களைக் குறைத்து மதிப்பிட வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. மாறாக, இறைவாக்கினர் எசாயாவின் ஏற்பு, அவர் தன்னை இறைவனுடைய பணிக்காக முழுமையாக கையளித்ததை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அவர் சற்றும் தாமதிக்கவில்லை. இதுதான் கடவுளுக்கு விருப்பம் என்றால், அதற்கு குறுக்கே நிற்பதற்கு நான் யார்? ஏனென்றால், இந்த வாழ்க்கை கடவுள் பரிசாகத் தந்தது. இந்த வாழ்வை கடவுளுக்கு பரிசாகக் கொடுப்பது தான், வாழ்க்கைக்கான அர்த்தமாக இருக்கும் என்பதை, இறைவாக்கினர் உணர்ந்திருக்கிறார். இறைவன் தூய்மையானவர். ஆனால், தூய்மையற்ற நாவைக் கொண்ட மனிதராக இருக்கிற நான் கடவுளைப் பார்த்துவிட்டேனே? இது மிகப்பெரிய குற்றம் என்று, இறைவன் முன்னிலையில் தன்னை குற்றவாளியாக கருதுகிறார். இந்த தாழ்ச்சி தான், அவரை இறைவன் முன்னிலையில் உயர்த்துகிறது.
இறைவன் தன்னுடைய பணிக்காக மனிதர்களை அழைக்கிறார். இந்த உலகத்தை தன்பால் ஈர்ப்பதற்கு அவர் எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் மனித உதவி தேவைப்படுகிறது. இறைவன் அவருடைய பணிக்காக, மக்களை மீட்பதற்காக முயற்சி எடுக்கிறபோது, நாம் அதற்கு முழுமையாக, இறைவாக்கினர் எசாயாவைப் போல, கையளிக்க வேண்டும். அப்போது, நம்முடைய வாழ்க்கை நிறைந்த அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்