உணவை வீணாக்க வேண்டாம்
நற்செய்தி நூல்கள் அனைத்திலும் காணப்படுகின்ற புதுமை, இயேசு அப்பத்தை பலுகச்செய்த புதுமை. பசுமையான புல்வெளியை பாலஸ்தீனத்தில் ஏப்ரல் மாத்தில் தான் பார்க்க முடியும். ஆகவே, இந்த புதுமை ஏப்ரல் மாதத்தின் நடுவில் நடைபெற்றிருக்கலாம். இந்த காலகட்டத்தில், சூரியன் ஏறக்குறைய மாலை ஆறு மணி அளவில் மறையக்கூடியதாக இருந்தது. எனவே, மாலைப்பொழுதில், சூரியன் மறையக்கூடிய அந்த நேரத்தில் தான் இந்த புதுமை நடைபெற்றிருக்க வேண்டும்.
மீதியுள்ள அப்பத்துண்டுகளை பன்னிரெண்டு கூடை நிறைய சேர்த்தார்கள் என்று சொல்லப்படுகிறது. பன்னிரெண்டு என்பது, திருத்தூதர்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. எங்கோ அமர்ந்து உணவுக்கே வழியில்லாமல் இருந்த மக்கள்கூட்டத்தில் கூடை எங்கிருந்து வந்தது? என்று நாம் நினைக்கலாம். பொதுவாக, பாரம்பரிய யூதர்கள் தங்களின் உணவை தாங்களே கூடைகளில் வெளியே எடுத்துச் சென்றனர். குறிப்பாக நீண்ட தூரப்பயணம் அமைகிறபோது, இந்த நடைமுறையைப் பின்பற்றினர். அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. யூதர்களுக்கு தூய்மை என்பது உண்கின்ற உணவிலும் மிகவும் சரியாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். வெளியே உணவு வாங்கி சாப்பிட்டால், உணவு தூய்மையற்றதாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே, அவர்கள், எங்கு சென்றாலும், ஒரு கூடையில் தங்களுக்குத் தேவையான உணவையும் எடுத்தேச் சென்றனர். நிச்சயமாக, இயேசுவின் போதனையைக் கேட்க வந்திருந்த பெரும்பாலான மக்கள் இந்த கூடைகளில் உணவையும் சேர்த்தே கொண்டு வந்திருப்பர்.
இந்த நற்செய்தி நமக்கு தரக்கூடிய செய்தி, எதையும் வீணாக்காமல் இருப்பதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு பருக்கை உணவு கிடைக்காமல் இலட்சக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். நாமோ, பல வேளைகளில், விழா என்ற பெயரில் உணவை வீணாக்கிக்கொண்டிருக்கிறோம். அந்த ஆடம்பரத்தைத் தவிர்த்து, எதையும் வீணாக்காமல் இருக்கக்கூடிய மனநிலை வேண்டி மன்றாடுவோம்.
~அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்