உணவருந்த வாருங்கள் !
உயிர்த்த இயேசு தம் சீடரிடம் காட்டும் பாசமும், பரிவும் நம் உள்ளத்தைத் தொடுகின்றன. அவர்கள் தம்மைக் கைவிட்டு ஓடிவிட்டதையோ, தமது உயிர்ப்பை நம்ப மறுத்ததையோ, தங்களின் பழைய வாழ்க்கைக்கே மீண்டும் திரும்ப முடிவு செய்ததையோ அவர் பொருட்படுத்தவில்லை. மாறாக, தந்தை தம் பிள்ளைகள்மேல் பரிவு காட்டுவதுபோல (திபா 103), இயேசு தம் சீடர்களுக்குப் பரிவு காட்டுகிறார். அவர்களுக்கு மீன்பாடு கிடைக்கவில்லை என்பதை அவர்களிடம் விசாரித்து அறியும்போதும், படகின் வலைப்பக்கத்தில் வலை வீசச்சொல்லி, பெரும் மீன்பாடு கிடைக்கச் செய்யும்போதும், களைப்போடும், பசியோடும் அவர்கள் கரைக்கு வரும்போது, அவர்களுக்கு உணவு தயாரித்து வைத்திருந்து, #8220;உணவருந்த வாருங்கள்” என்று அழைக்கும்போதும், உயிர்த்த இயேசுவின் பரிவை நாம் கண்கூடாகக் காண முடிகிறது.
இந்தப் பாஸ்காக் காலத்தில் உயிர்த்த இயேசுவின் பாசத்தை நாமும் அனுபவிப்போம். நமது கடந்த கால வாழ்வை, குறைகளை, பாவங்களை அவர் நினைவுகூராமல், நம்மைப் பரிவுடன் பராமரிக்கும் அவரது பேரன்பைப் போற்றி மகிழ்வோம்.
மன்றாடுவோம்: கடந்த காலக் கசப்பு அனுபவங்களை வென்ற வெற்றி வீரரான ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். எனது முன்னாள் வாழ்வு, தவறுகள் அனைத்தையும் நீர் மறந்து, மன்னித்து, என்னைப் புதுப் படைப்பாக மாற்றுவதற்கும், உமது பாசம் நிறை கண்களால் என்னைப் புதுப் படைப்பாகக் காண்பதற்கும் உமக்கு நன்றி கூறுகிறேன். என் இதயத்தைப் புதிதாக மாற்றும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
–அருட்தந்தை குமார்ராஜா