உணர்விலிருந்து உண்மைநிலைக்கு….
இன்றைய நற்செய்தியிலே (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 27-28) உணர்வுகளால் உந்தப்பட்ட ஒரு பெண்ணைப் பார்க்கிறோம். உணர்வுகளால் உந்தப்பட்ட அவள், இயேசுவைப் பெற்றேடுத்த தாயைப்புகழ்கிறாள். உணர்வுகள் நல்லது தான். ஆனால், உணர்வு அளவில் நாம் நின்றுவிடக்கூடாது. அதையும் தாண்டி, உண்மை நிலைக்கும், யதார்த்த நிலைக்கும் நாம் செல்ல வேண்டும் என்பதை இயேசு நமக்குக்கற்றுத்தருகிறார்.
நம்முடைய வாழ்வில் உணர்வுகளை பலவிதங்களில் வெளிப்படுத்துகிறோம். அழுகையாக, சிரிப்பாக, கோபமாக, வெறுப்பாக உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம். உணர்வு அளவிலே நாம் நின்று விடக்கூடாது. உணர்வுகளையும் கடந்து யதார்த்த நிலைக்கு, உண்மை நிலைக்கு செல்வதுதான் நம்முடைய பக்குவத்தை வெளிப்படுத்துகின்ற ஒன்று. எந்த ஒரு நிகழ்வை நாம் வாழ்வில் சந்தித்தாலும் அதனை எதிர்கொள்ளும் பக்குவத்தை நாம் வளா்த்துக்கொள்வதுதான் யதார்த்த நிலைக்கு செல்வது. இயேசு அந்தப் பெண்ணின் வார்த்தைகளுக்கு மயங்கிவிடவில்லை. உணர்வு அளவிலே தங்கிவிடவில்லை. அதனைக்கடந்து தெளிந்து நிலைக்குச் செல்கிறார். அதனை நாமும் கற்றுக்கொள்ள அழைப்புவிடுக்கிறார்.
இயேசு உணர்வு நமக்கு வேண்டாம் என்று சொல்லவில்லை. உணர்வோடு தங்கியிருக்க வேண்டாம் என்று சொல்கிறார். அது நமது வாழ்வின் வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருக்கக்கூடாது என்று சொல்கிறார். அந்த அழைப்பை ஏற்று வாழ்வோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்