உட்காருவதனால் உண்டாகும் பலன்கள் அதிகம்
லூக்கா 14:25-33
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
பரபரப்பான உலகில் வாழும் நாம் வாழ்க்கையில் எதையும் நிதானமாக உட்கார்ந்து சிந்திப்பதில்லை. உட்கார்ந்து சிந்திக்கும் போதுதான் நம்மைப் பற்றிய உண்மை நிலவரங்கள் வெளிப்படுகின்றன. அதிலே தான் நாம் நம்மை முன்னேற்றுவதற்கான செயல்பாடுகளைச் செய்ய முடிகிறது. உட்காருவதால் உண்டாகும் இரண்டு முக்கிய பலன்களை சொல்லித் தர வந்திருக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.
1. பலம் கிடைக்கிறது
நாம் உட்கார்ந்து சிந்திக்கும்போது கடினமான வாழ்க்கையை சந்திப்பதற்கான பலம் கிடைக்கிறது. உட்கார்ந்து ஒரு சில மணித்துளிகள் சிந்திக்கும்போது நம் மனது பலவிதமான, புதுமையான யோசனைகளை அள்ளி அள்ளி வழங்குகிறது. இயேசுவின் பின்னால் செல்லும் போது ஏற்படும் துன்பங்களை எப்படி சளி்க்காமால் சமாளிக்க வேண்டும் என்பது அங்கே வெளிப்படுகிறது. உட்காருங்கள் உறுதியாவீர்கள்.
2. பாதை கிடைக்கிறது
நன்றாக உட்கார்ந்து சிந்திக்கும் போது தான் வாழ்க்கையைத் திட்டம்போட்டு கொண்டு போக வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். உட்கார உட்கார பல நல்ல திட்டங்கள் புறப்பட்டு வரும். அவைகள் நம் வாழ்விற்கான தெளிவான பாதையைக் காட்டுகின்றன. உட்கார்ந்து திட்டம் போடுகிறவன் ஆரோக்கியமாகவும் திடகார்த்தமாகவும் இருப்பான்.
மனதில் கேட்க…
1. உட்கார்ந்து நிதானமாக சிந்தித்து செயல்படுபவனா நான்?
2. உட்கார்ந்து சிந்தித்தால் மட்டுமே வாழ்க்கையில் ஆரோக்கியம், அழகு வரும் தெரியுமா?
மனதில் பதிக்க…
எல்லாவற்றிலும் உன் முடிவை நினைவில்கொள். அவ்வாறெனில் ஒருபோதும் நீ பாவம் செய்யமாட்டாய் (சீராக் 7:36)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா