உடனிருப்பும், ஒத்துழைப்பும்
இயேசுவின் போதனைகளை நாம் கேட்கிறபோது, நம்மால் அவரைப் பின்தொடர முடியுமா? அவருடைய போதனையில் நிலைத்து நிற்க முடியுமா? என்கிற சிந்தனைகள் நமது உள்ளத்தில் ஓட ஆரம்பிக்கிறது. நிச்சயம் இயேசுவின் போதனைகளை நமது வாழ்வில் ஏற்று, வாழ முயற்சிப்பது சவாலான ஒன்றுதான். ஆனாலும், நாம் அனைவரும் அப்படிப்பட்ட வாழ்வை வாழ வேண்டும், கடவுளுக்கு ஏற்புடையதாக நமது வாழ்வு அமைய வேண்டும் என்று நற்செய்தி நமக்கு கற்றுக்கொடுக்கிறது.
நாம் போதனைகளை வாழ முயற்சி எடுத்து, அதில் நம்மால் வாழ முடியாவிட்டாலும், குறைந்தபட்சம், கிறிஸ்துவின் போதனைகளை வாழ முயற்சி எடுக்கும் அனைவருக்கும் நமது உடனிருப்பையும், ஒத்துழைப்பையும் முழுமையாகக் கொடுக்க வேண்டும் என்பது நமது விருப்பமாக இருக்கிறது. ஒரு ஓட்டப்பந்தயத்தில் பல வீரர்கள் ஓடுகிறார்கள். ஓடக்கூடிய அனைத்து வீரர்களையும் மக்கள் கைதட்டி உற்சாகப்படுத்துகிறார்கள். அவர்கள் வெற்றி பெறுவதோ, தோல்வியடைவதோ, அவர்களுக்கு கிடைக்கும் பாராட்டிற்கு தடையாக இருப்பது இல்லை. அதேபோலத்தான், கடவுளின் வார்த்தையை வாழ முயற்சி எடுக்கும் அனைவருக்கும் நமது ஒத்துழைப்பையும், உடனிருப்பையும், வாழ்த்துக்களையும் கொடுக்க வேண்டும்.
உடனிருப்பு என்பது கடவுள் பார்வையில் மிகச்சிறந்ததாக இருக்கிறது. துன்பத்தில் உடனிருப்பதும், ஆறுதல்கூறுவதும் மிகப்பெரிய விழுமியங்களாக மதிக்கப்படுகிறது. அது கடவுளின் கொடையையும், ஆசீரையும் பெற்றுத்தரக்கூடியவைகளாக போற்றப்படுகிறது. அத்தகைய உடனிருப்பை நாமும் மற்றவர்களுக்கு வழங்குவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்