உடனிருந்து செயலாற்றும் இறைவன்
திருத்தூதர் பணி 16: 11 – 15
இறைவன் நம்மிலிருந்து செயலாற்றுகிறார் என்பதை, இன்றைய வாசகம் நமக்கு மிகச்சிறப்பாக உணர்த்துகிறது. ”இறைவன் முன் நாங்கள் பயனற்ற ஊழியா்கள். எங்கள் கடமையைத்தான் செய்தோம்” என்கிற இறைவார்த்தைக்கு ஏற்ப, பவுலடியார் தனக்கு நடக்கிற இன்னல்களை, இடையூறுகளை நினைத்து கவலைப்படாமல், தன்னுடைய பணியை அவர் செய்து கொண்டேயிருக்கிறார். ஆச்சரியம் என்னவென்றால், கல்லைக்கூட கரைக்க முடியும் என்பது போல, கடினமான உள்ளத்தவரும், பவுலடியாரின் வார்த்தைகளைக் கேட்டு மனம் திருந்துகிற அளவிற்கு, தூய ஆவியானவர் அவரோடு உடனிருந்து செயலாற்றுகிறார்.
நம்முடைய வாழ்க்கையில் நாம் முயற்சிகளை எடுக்கிறபோது, அதற்கான பலனை நாம் உடனே பெற்றுவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி கிடைக்காதபோது, நாம் ஏமாற்றமடைகிறோம். அது தவறு. நம்முடைய கடமையை நாம் செய்து கொண்டே இருக்க வேண்டும். அதற்கான பலனை கடவுள் கண்டிப்பாக நமக்குத் தருவார். எப்படிப்பட்ட கடினமான காரியம் என்றாலும், நாம் கடினமாக உழைக்கிறபோது, அதற்கான பலன் நமக்கு கிடைக்காமல் போகாது. இறைவன் எப்படியெல்லாம் செயலாற்றுகிறார் என்பதை, நிச்சயம் பவுலடியார் நினைத்து ஆச்சரியப்பட்டிருப்பார். இன்னும் கடவுள் மேல் நம்பிக்கை கொண்டு, பல்வேறு மக்களுக்கு ஆர்வமாக நற்செய்தி அறிவிப்பதற்கு, பவுலடியாருக்கு அது மிகப்பெரிய உந்துசக்தியாக இருந்திருக்கும்.
கடமையைச் செய்வதற்கு நாம் சோம்பேறித்தனம் அடையக் கூடாது. நாம் கடினமாக உழைக்க வேண்டும். எத்தகைய காரியங்களைச் செய்தாலும், நாம் சோர்ந்து போகாமல் தொடர்ந்து உழைக்கிறவர்களா வாழ, இந்த வாசகம் நமக்கு அழைப்புவிடுக்கிறது. இறைவன் நம்மோடு இருக்கிறார் என்கிற உணர்வோடு, நன்றாக உழைப்போம். இறைவன் நம் உடனிருந்து செயலாற்றுவார்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்