உடனிருக்கும் தூதர்களாவோம்!
புனித மிக்கேல்,கபிரியேல்,ரபேல்-அதிதூதர்கள் திருவிழா
யோவான் 1:47-51
இறையேசுவில் இனியவா்களே! அதிதூதர்கள் திருவிழாவிற்கு ஆனந்தத்தோடும் ஆர்ப்பரிப்போடும் வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
அதிதூதர்களான மிக்கேல், கபிரியேல், இரபேல் ஆகியோரின் திருநாளைக் இன்று நாம் கொண்டாடுகிறோம். அதிதூதர்களின் சிறப்பு என்ன? கீழே பார்க்கலாம்.
- தீமையிலிருந்து காப்பாற்றும் மிக்கேல்,
- மங்கள வார்த்தை சொல்லும் கபிரியேல்,
- நலம் நல்கும் இரபேல்
என மூன்று அதிதூதர்கள் இருக்கின்றனர். நம் கத்தோலிக்க நம்பிக்கை மரபில். தூதர்கள் என்பவர்கள் இசுலாம், யூத, மற்றும் பாரசீக சமயங்களிலும் காணப்படுகின்றனர். இறைவனுக்கும், மனிதருக்கும் இடைப்பட்டவர்கள் இவர்கள். இரண்டு இயல்புகளையும் உடையவர்கள் இவர்கள். கடவுளைப் போல காலத்தையும், இடத்தையும் கடந்து நின்றாலும், மனிதர்களைப் போல காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டவர்கள் இவர்கள். நிறைய நாள்கள் நாம் கடவுளையும், புனிதர்களையும் நினைத்துப் பார்க்கிறோம். இந்த ஒருநாள் அதிதூதர்களை சிறப்பாக நினைத்துப் பார்க்கலாமே. அவர்களை நினைக்கும் இந்த இனிய நாளில் இரண்டு செய்திகளை உள்ளவாங்க அழைக்கப்படுகிறோம்.
1. உடனிருப்பு
நாம் தனிமையில் இல்லை. அவர்கள் என்றும் நம் உடனிருக்கிறார்கள். நாம் செல்லும் இடமெல்லாம் நம்மைக் காக்கும்படி கடவுள் தம் தூதர்களுக்கு கட்டளையிடுவார். நம் கால் கல்லின்மேல் மோதாதபடி அவர்கள் தங்களை கைகளில் நம்மைத் தாங்கிக்கொள்வர்.
2. உடனிருக்க
நாமும் இந்த அதிதூதர்கள் போல பிறர்வாழ்வில் உடனிருக்க நம்மை அழைக்கிறார்கள். பிறர் சாயும்போது தோள் கொடுப்பவர்களாகவும், துன்பத்தில் அவர்களுக்கு சுகம் கொடுப்பவர்களாகவும், சுமைதாங்கிளாகவும், ஆறுதலளிப்பவர்களாகவும், தடுமாறும்போது சரியான தடத்தை காட்டுபவர்களாகவும் இருக்க வேண்டும். அதற்கு நமது உடனிருப்பே உதவி செய்ய முடியும்.
மனதில் கேட்க…
1. அதிதூதர்களோடு என்னுடைய தொடர்பு என்ன? அவர்கள் உடனிருப்புக்காக மன்றாடலாமா?
2. நாமும் அதிதூதர்களாக மாறி அடுத்தவரின் ஆபத்தை போக்க வழிவகை செய்யலாமா?
மனதில் பதிக்க…
‘வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’ (யோவான் 1:51)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா