உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்
விடுதலைப்பயணம் 17 வது அதிகாரத்தில் இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து திரும்பி வந்த பயணத்தைப் பார்க்கிறோம். இஸ்ரயேல் மக்கள் இரபிதீம் என்கிற இடத்தில் பாளையம் இறங்கினர். அங்கே அவர்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை. எங்கும் வறண்ட பாலைநிலம். மக்கள் மோசேக்கு எதிராகவும், கடவுளுக்கு எதிராகவும் முணுமுணுக்கத் தொடங்கினர். ஆண்டவர் அந்த பாலைநிலத்திலும் அற்புதமாக அவர்கள் தண்ணீர் பருகச்செய்தார்.
இந்த நிகழ்ச்சியில், இஸ்ரயேல் மக்களைச் சோதனைக்குள்ளாக்கியதாக நாம் பார்க்கிறோம். அது என்ன சோதனை? கடவுள் இவ்வளவுக்கு இஸ்ரயேல் மக்களுக்கு நன்மைகளைச் செய்திருக்கிறார். ஆனால், இஸ்ரயேல் மக்கள் அதனை கருத்தில் கொள்ளாமல், அற்ப காரணங்களுக்காக கடவுளையே சோதித்தனர். கடலை அற்புதமாக இரண்டாகப் பிளக்கச்செய்த கடவுளுக்கு, எகிப்திய நாட்டையே கதிகலங்க வைத்த இறைவனுக்கு, அவர்களின் தாகத்தைத் தணிப்பது பெரிய காரியமா என்ன? அவர்கள் பொறுமையாக, கடவுளின் வல்லமையை உணர்ந்து தண்ணீர் கேட்டிருந்தாலே, அவர்கள் நிறைவாகப் பெற்றிருப்பார்கள். ஆனால், அவர்கள் கடவுளைச் சோதித்தனர். முணுமுணுத்தனர்.
கடவுளிடமிருந்து ஏராளமான வல்ல செயல்களை நாம் பெற்றிருந்தாலும், அவரின் வல்லமையை நாம் அறிந்திருந்தாலும், நாமும் கூட அற்பக்காரியங்களுக்காக, கடவுளைப் புறந்தள்ளுகிறோம். சோதிக்கிறோம். அதிலிருந்து விடுதலை பெற்றவர்களாக வாழ, முயற்சி எடுப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்