உங்கள் பெயர் இருக்கிறதா?
லூக்கா 10:17-24
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
நமது பெயர் திருமண அட்டையில் வர வேண்டும், திருவிழா அழைப்பிதழில் வர வேண்டும் மற்றும் மேடையில் நம் பெயர் உச்சரிக்கப்பட வேண்டும் என்று நாம் ஆசைப்படுவது உண்டு. அதுவெல்லாம் உயர்வல்ல. நம் பெயர் விண்ணத்தில் இருக்கிறதா? அதுதான் மிக முக்கியம். இன்றைய நற்செய்தி வாசகம் விண்ணகத்தில் உங்கள் பெயர் இருக்கிறதா? என்பதை பரிசோதித்துப் பாருங்கள். பெயர் இல்லையென்றால் எழுத முயற்சி எடுங்கள் என நம்மோடு பதமாக பேசுகிறது.
மண்ணகத்தில் நாம் செய்யும் சிறப்புமிக்க செயல்கள் தான் விண்ணத்தில் நம் பெயர்கள் எழுதப்பட மிகச் சிறந்த காரணிகளாக உள்ளன. மண்ணகத்தில் நாம் இரண்டு செயல்களின் மீது கவனம் செலுத்தினால் அதுதான் விண்ணகத்தில் நம் பெயர்கள் எழுதப்பட தகுதியாக அமையும்.
1. தாமதம்
பிறர் நமக்கு எதிராக செயல்பட்டால் நாம் உடனே அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என துடிக்கிறோம். அப்படி துடிப்பது துன்பத்தை விளைவிக்கும். மாறாக தாமதமாக செயல்படுவது சிறப்பு. அந்த தாமதம் தரமான செயல்பாட்டிற்கு நம்மை இட்டுச் செல்லும். விண்ணத்தில் பெயர் எழுதப்படும்.
2. தாராளம்
நமக்கு எதிராக தவறு செய்த நபருக்கு நாம் மன்னிப்பு வழங்குவதில் தாராளமாக செயல்படுவது சிறப்பு. இதுதான் வாழ்க்கையை நன்கு அறிந்தவர்கள் செய்யும் அற்புதமான முயற்சி. இந்த மன்னிப்பு பல மாற்றங்களை விளைவிக்கிறது. விண்ணத்தில் பெயர் எழுதப்படும்.
மனதில் கேட்க…
1. விண்ணகத்தில் என் பெயர் எழுதப்படும் அளவுக்கு நான் செய்து வருவது என்ன?
2. தாமதம், தாராளம் எனக்கு பிடிக்கிறதா? என்னிடத்தில் உள்ளதா?
மனதில் பதிக்க…
உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள் (லூக் 10:20)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா