உங்கள் பெயரை சிறப்பாக்கி விட்டீர்களா?
மத்தேயு 16:13-23
நமக்கு நாம் பெற்றிருக்கின்ற பெயர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த பெயரை மிகவும் சிறப்பாக மாற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. நமது பெயர் புகழ்பெற்றதாய், பிரபலமானதாய் மாற வேண்டும். அதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டியது நம் தலையாய கடமை.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் பேதுரு என்ற பெயரை ஆண்டவர் இயேசு கிறிஸ்து உச்சரிக்கிறார். அதன் சிறப்புத்தன்மைகளை எடுத்துரைக்கிறார்.
- பேதுரு என்றால் பாறை. யாரும் அசைக்க முடியாது. உறுதியானது
- திருச்சபை அதன் மேல் கட்டப்படும்
- பாதாளத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றி கொள்ளா
- விண்ணரசின் திறவுகோல்கள் தரப்படும்
- மண்ணுலகில் தடைசெய்வது விண்ணுலகில் தடைசெய்யப்படும். மண்ணுலகில் அனுமதிப்பது விண்ணுலகில் அனுமதிக்கப்படும்
பேதுரு என்ற பெயரைப் பற்றி இயேசு பெருமையாக பேசுகிறார். அவரிடம் மிக உயரிய பொறுப்பினை வழங்குகின்றார். பலவீனங்கள் அவரிடம் இருந்தன. அவற்றையெல்லாம் அவர் உடைத்துப்போடடார். தன் பெயரை சிறப்பாக்கினார். பேதுருவின் கடின உழைப்பு, தாழ்ச்சி, பொறுமை, தியாகம் இவைகள் தான் அவரின் பெயரை சிறப்பாக்கின.
நமது பெயரை சிறப்பாக மாற்ற வேண்டியது நாம்தான். நம் பெயரைக் கொண்டு நம்மை பலர் அறியும்படி செய்வோம். பேதுருவிடம் இருந்த கடின உழைப்பு, தாழ்ச்சி, பொறுமை, தியாகம் இவைகளை நாம் கற்றுக்கொள்வோம். கடைப்பிடிப்போம். சிறப்பாக நம் பெயரை மாற்றுவோம்.
மனதில் கேட்க…
என் பெயர் எனக்கு பிடித்திருக்கிறதா?
என் பெயரை சிறப்பாக்க நான் செய்து வருவது என்ன?
மனதில் பதிக்க…
இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர் (பிலி 2:10)
~அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா