உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்கள்
திருப்பாடல் 95: 6 – 7, 8 – 9, 10 – 11
ஒருவிதமான பிடிவாத நிலையில் இருப்பதுதான், இந்த திருப்பாடல் வரிகளின் பொருளாக இருக்கிறது. கடவுள் இஸ்ரயேல் மக்களை மீட்பின் வரலாற்றில் மிகச்சிறப்பாக வழிநடத்தி வந்திருக்கிறார். அடையாளமே இல்லாத மக்களுக்கு அடையாளத்தைக் கொடுத்து, நாடில்லாமல் நாடோடிகளாக வாழ்ந்தவர்களுக்கு நாட்டைக்கொடுத்து, முதுபெரும் தலைவர்கள் வழியாக, நீதித்தலைவர்கள் வழியாக, அரசர்கள் வழியாக, இறைவாக்கினர்கள் வழியாக, அவர்களை இறைவன் வழிநடத்த வந்திருக்கிறார். இந்தளவுக்கு மக்கள் மீது அன்பு வைத்திருக்கிற இறைவனை, இஸ்ரயேல் மக்கள் விட்டுவிட்டு, பாவ வாழ்க்கையில் வாழ ஆரம்பித்தனர்.
அநீதி செய்தனர். வேற்றுத் தெய்வங்களை ஆராதித்தனர். தவறான ஒழுக்கச் சீர்கேட்டில் வாழ்ந்து வந்தார்கள். தங்களை வழிநடத்திய கடவுளுக்கு எதிராக இவ்வளவு செய்தாலும், கடவுள் அவர்களை மன்னிப்பதற்காகவே காத்திருந்தார். தொடர்ந்து அவர்களுக்கு நன்மைகளைச் செய்தார். அவர்களை தன்னுடைய பிள்ளைகளாக, திரும்பிவர எதிர்பார்த்து நின்றார். ஆனால், இஸ்ரயேல் மக்களோ, பிடிவாதமாக, தங்களது தீய வாழ்க்கையைத் தொடர்ந்தனர். கடவுளைத் தொடர்ந்து புறக்கணித்தனர். அவரை விட்டு, வெகுதூரம் சென்றனர். நன்றியுணர்வு இல்லாதவர்களாக இருந்தனர். இப்படிப்பட்ட சூழலில், திருப்பாடல் ஆசிரியர், தங்களை நல்வழிப்படுத்த காத்திருக்கும் ஆண்டவரிடம் திரும்பி வர அழைப்புவிடுக்கின்றார்.
நமது வாழ்விலும் கடவுள் பல நன்மைகளைச் செய்திருக்கிறார். ஆபத்தான சூழ்நிலைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றியிருக்கிறார். எந்நாளும் நமக்கு அரண் போல பாதுகாப்பு தருகிறார். ஆனாலும், நாம் அவரது குரலுக்கு செவிமடுக்க மறுக்கிறோம். அவரை புறக்கணித்து ஒதுக்குகிறோம். நமது தேவைக்கு மட்டும் அவரைப் பயன்படுத்துகிறோம். இந்த நிலையிலிருந்து நம்மில் மாற்றத்தை நாம் வேண்டுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்