உங்கள் இதயங்களைக் கடினப்படுத்தாதீர்
உள்ளத்தைக் கடினப்படுத்துவது என்றால் என்ன? செய்வது தவறு என்பது தெரிந்தாலும், அதனையே மீண்டும், மீண்டுமாகச் செய்வது தான் கடினப்படுத்திக்கொள்வது ஆகும். பழைய ஏற்பாட்டில், இஸ்ரயேலின் மீட்பின் வரலாற்றில் எகிப்தை ஆண்ட, பார்வோன் மன்னன் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. பார்வோன் மன்னன் கடவுள் செய்த வல்ல செயல்களைக் கண்டு, அதனால் அவன் சந்தித்த இழப்புக்களை நினைத்து, இஸ்ரயேல் மக்களை திரும்பிப்போக பணித்தான். ஆனால், நிலைமை சரியான உடனே, அவர்கள் செல்வதற்கு தடைவிதித்தான். அவனுடைய இதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டான். தான் செய்வது தவறு என்பது அவனுக்குத் தெரியும். ஆனாலும், அதனைச் செய்யாமலிருக்க அவனால் முடியவில்லை. அதனால் வரக்கூடிய விளைவுகளுக்கும் அவன் தான் பொறுப்பேற்க வேண்டும். இஸ்ரயேல் மக்களும் இதே தவறைச் செய்தார்கள். தங்களை இந்த உலகத்தில் ஒரு நாடாக அடையாளப்படுத்தியவர் கடவுள் என்பது அவர்களுக்குத்தெரியும். இஸ்ரயேல் மக்களின் எழுச்சிக்கும், மாட்சிமைக்கும் உற்ற துணைவராக இருந்தது கடவுள் தான் என்பது அவர்கள் அனுபவித்த ஒன்று. அந்த கடவுளை விட்டுச் செல்வது என்பது அவர்களாகவே அழிவைத் தேடிக் கொள்வதற்கு சமம் என்பது அவர்களது அறிவிற்கும், அனுபவத்திற்கும் எட்டிய ஒன்று. ஆனாலும், அவர்கள் கடவுளை விட்டு விலகிச்சென்றார்கள். அதுதான் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்வது. இதனால் அவர்கள் சந்தித்த இழப்புக்களும், வாய்ப்புக்களும் அதிகம். நமது இதயத்தைக் கடினப்படுத்திக்கொள்ளாத நல்ல மனம் வேண்டுமென்று மன்றாட, திருப்பாடல் (திருப்பாடல் 95)ஆசிரியர் அழைப்புவிடுக்கிறார்.
இதயம் என்பது அன்பிற்கு அடித்தளமாக ஒப்பிடப்படுவது. அந்த இதயத்தில் கனிவும், அன்பும், பாசமும் இருக்க வேண்டுமே தவிர, வெறுப்பும், வைராக்கியமும் இருக்கக்கூடாது. அது நமது வாழ்வையே அழித்துவிடும். அந்த அழிவிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள கடவுள் அருள் வேண்டுவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்