உங்களில் ஒருவன்…!
(யோவான் 13 : 21-33,36-38)
‘உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்’ இந்த இறைவார்த்தை இன்றுவரை நமது திரு அவையில், பங்குதளத்தில் ஒலித்துக் கொண்டிருப்பதை நம்மால் கேட்க முடிகிறது. காட்டிக்கொடுப்பதும், முதுகில் குத்துவதும் இன்று நமது வாழ்வின் அங்கமாகவே மாறிவிட்டது. பொதுவாழ்விலும் தனிவாழ்விலும் யூதாசுகள் இன்று பெருகிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நாம் அனைவரும் இன்றுவரை யூதாசைப் பழித்துரைத்துக் கொண்டிருக்கிறோம்.
இன்றைய நற்செய்தியில் இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு அன்பு செய்யப்பட்ட இருவரின் உண்மை முகமானது கிழிக்கப்படுகிறது. ஒருவர் யூதாசு, மற்றொருவர் பேதுரு. வயதில் முதிர்ந்தவர் பேதுரு, இளையவர் யூதாசு. அனைத்து நிகழ்வுகளிலும் இயேசுவோடு இருந்தவர் பேதுரு. அப்பப்பம் வந்து செல்பவர் யூதாசு. இவற்றை ஏன் இங்கு கூறுகிறேன் என்றால் இன்றைய நற்செய்திக்கும், லூக்கா நற்செய்தியாளரின் ஊதாரி மகன் உவமைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாகப் பார்க்கிறேன். எவ்வாறு இளையமகன் சொத்துக்களை (இறைவனின் அருள்) பெற்றுக் கொண்டு நெடுந்தொலைவு சென்றானோ (இறைவனை விட்டு வெகு தொலைவு) அதைப்போலவே இன்றைய நற்செய்தியில் யூதாசு இயேசுவின் அப்பத்தைப் பெற்றுக் கொண்டவுடன் ‘வெளியே’ செல்கிறான். மிகவும் முக்கியமாகக் கவனிக்கக் கூடியது யோவான் நற்செய்தியாளரின் அடுத்த வார்த்தைதான், “அது இரவு நேரம்”. இந்த இரவு நேரம் என்பது யோவானைப் பொறுத்தவரையில், ‘பாவத்தை’, ‘அறியாமையை’, ‘இருளின் ஆதிக்கத்தைச் சுட்டிக்காட்டுகிறது. அவரின் அருளினைப் பெற்றவர்கள் அவரோடு இல்லாவிட்டால் இருளின் ஆதிக்கத்திற்கு அடிபணிவார்கள் என்பதையே இது காட்டுகின்றது. ஆனால் ஊதாரிமகன் உவமையில் இளையவன் திரும்பி வந்தான். இங்கு நாண்டு கொண்டு செத்தான். மூத்தவன் வெளியே நின்று கொண்டு தந்தைக்கு எதிராகப் புலம்பினான். இங்கு பேதுரு தனது தவற்றை உணர்ந்து ஆண்டவரை அண்டி வந்தார், ஏற்றுக் கொள்ளப்பட்டார்.
நாமும் பலநேரம் ஆண்டவரின் அருனைப் பெற்றுக் கொண்டு அவரை விட்டு ‘வெளியே’ சென்று விடுகிறோம். இருளில் சிக்கிக் கொள்கிறோம். சிக்கினாலும் தவித்தாலும் ஆண்டவருக்கும் அவரின் மதிப்பீடுகளுக்கும் எதிராகச் சென்று அவரைக் காட்டிக் கொடுக்க மாட்டோம் என்று உறுதி கொள்வோம்.
– திருத்தொண்டர் வளன் அரசு