உங்களால் உலகையே உருட்ட முடியும்
மத்தேயு 17:14-20
நம் யாவே கடவுள் ஆற்றல் நிறைந்தவர். சக்தி நிறைந்தவர். அவரின் ஆற்றலால் அனைத்தும் நடக்கும். இதை தொடக்கநூல் 18:13ல் வாசிக்கிறோம், ”ஆண்டவரால் ஆகாதது எதுவும் உண்டோ? மேலும் லூக்கா 1:37ல், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என வாசிக்கிறோம். உருவமற்று வெறுமையாக இருந்த மண்ணுலகை பசுமையான சோலையாக மாற்றிய சர்வ வல்லமைமிக்க கடவுள் யாவே கடவுள்.
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் தந்தையைப் போல அதிவேக அற்றலுடன் செயல்பட்டார். வார்த்தையினால் வாழ்வு அளித்தார். பாவிகளை தொட்டார். மனமாற்றத்தை உருவாக்கினார். அதிசயங்களை நிகழ்த்திக்கொண்டே இருந்தார்.
கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்ட நாமும் சக்திமிக்வர்கள் தான். அதிக அற்றல் கொண்டவர்கள் தான். இதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் அதிக அழுத்தத்துடன் அறிவிக்கிறார் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. நம்மால் முடியாதது ஒன்றும் இல்லை. அதற்கு கீழே உள்ள கண்டுபிடிப்பு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
மகிழ்ச்சி என்பது நமக்கு வெளியில் இல்லை. நமக்குள்ளேதான் இருக்கிறது என்பதை நெதர்லாந்தில் இருக்கும் ஆம்ஸ்டர்டாம் பல்கலைகழக பேராசிரியர்கள் மெய்க் பார்டெல்ஸ், ஃபிலிப் கோலிங்கர் கண்டுபிடித்துள்ளனர். இவர்கள் இருவரும் சுமார் 298,000 நபர்களிடம் ஆராய்ச்சி நடத்தினர். ஆய்வின் முடிவில் மகிழ்ச்சிக்கான மரபணுக்கள் நமது உடலின் எந்த பாகத்தில் உள்ளது என கண்டுபிடித்துள்ளனர். மகிழ்ச்சியை ஏற்படுத்தும் மரபணுக்கள் முக்கியமாக மைய நரம்பு மண்டலத்திலும், கணையத்திலும், அட்ரினல் சுரப்பியிலும் வெளிப்படுகிறது.
உலகை உருட்டும் அளவுக்கு சக்தி நம்மில் இருக்கிறது. அதை வெளியே எடுத்து பயன்படுத்துவோம். நம் ஆற்றலை அவனி அறிய செய்வோம். அதுவே நம் பெருமை என்பதை உணர்வோம்.
மனதில் கேட்க…
நான் சக்தி மிக்கவன் என்பது எனக்கு தெரியுமா?
என்னுடைய ஆற்றலை பயன்படுத்தி நான் செய்தவைகள் என்னென்ன?
மனதில் பதிக்க…
ஆண்டவரே என் ஆற்றல்: என் பாடல். அவரே என் விடுதலை: என் கடவுள். அவரை நான் புகழ்ந்தேத்துவேன். அவரே என் மூதாதையரின் கடவுள்: அவரை நான் ஏத்திப்போற்றுவேன். (விப 15:2)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா