”இவர் யாரோ? இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே!” (லூக்கா 9:9)
இயேசு கலிலேயாவில் ஊர் ஊராகச் சென்று நற்செய்தி அறிவித்தபோது புதுமைகள் பல நிகழ்த்தினார். அவரைப் பற்றி எல்லாரும் பேசிக்கொண்டார்கள். என்றாலும் இயேசு யார் என்னும் கேள்விக்குப் பலரும் பல பதில்களைத் தந்தனர். ஏரோதுவின் ஆணைப்படி கொல்லப்பட்ட திருமுழுக்கு யோவான் மீண்டும் உயிர்பெற்று வந்திருக்கிறார் என்றுகூட மக்கள் இயேவைப் பற்றிக் கருத்துத் தெரிவித்ததுண்டு. ஆனால் ஏரோது அப்படி நினைக்கவில்லை. அவன்தான் யோவானின் தலையைக் கொய்துவர ஆணையிட்டவனாயிற்றே. யோவான் இறந்தொழிந்தார் என்பது ஏரோதுவுக்கு நன்றாகவே தெரியும். மக்கள் பேசிக்கொண்டது வேறு ஒருவரைப் பற்றித்தான் என்பது ஏரோதுவுக்குப் புரிந்தது. என்றாலும் அந்த மர்ம மனிதர் யார் என்பதை ஏரோது தெரிந்திருக்கவில்லை.
இயேசு யார் என நமக்குத் தெரியுமா? பலரும் இயேசு யார் என்பதைத் தெரிந்ததுபோல நினைத்துக்கொள்கின்றார்கள். ஆனால் உண்மை என்ன? இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் எத்தனையோ மக்கள் இயேசுவை யார் என அடையாளம் தெரியாமலே வாழ்கின்றார்கள். இவர்களுள் கிறிஸ்தவரும் உண்டு, பிறரும் உண்டு. ”புதியது என்று உலகில் எதுவுமே இல்லை” (காண்க: சபை உரையாளர் 1:9) என்னும் தத்துவத்தின் அடிப்படையில் இவர்கள் ஏற்கெனவே யாவும் தெரிந்தவர்களாகத் தம்மைப் பற்றியே நினைத்துக்கொள்வதால் இயேசுவைப் பற்றி ஆழ்ந்த அனுபவ அறிவைப் பெற முயற்சிசெய்வதில்லை. நாம் ஒவ்வொருவரும் புதிய பார்வை பெற வேண்டும்; புதிய இதயம் கொண்டிருக்க வேண்டும்; அப்போது என்றுமே புதிதாகத் துலங்கி ஒளிர்கின்ற நற்செய்தியைப் புது முறையில் ஒவ்வொரு நாளும் அணுகுவோம். இவ்விதத்தில் இயேசு யார் என்பதை மேன்மேலும் ஆழமாக நம்மால் உணர்ந்தறிய இயலும். திறந்த உள்ளம் இருந்தால் கடவுளின் வெளிப்பாடு அங்கே நிகழுமன்றோ!
மன்றாட்டு
இறைவா, நற்செய்தியாக வந்த இயேசுவின் ஒளி புதுப்புது வண்ணங்களில் எங்கள் உள்ளத்திலும் வாழ்விலும் துலங்கிட அருள்தாரும்.
அருட்திரு பவுல் லியோன் வறுவேல்