இழப்பும், ஆதாயமும்
ஏரோது அந்திபாஸ் அரசருடைய எல்கையில் தான் கப்பர்நாகும் இருந்தது. மத்தேயு ஏரோதுவின் அரச அலுவலராய் இருந்தார். அவர் நேரடியாக உரோமை அரசின் அலுவலராய் இல்லை. கப்பா்நாகும் அமைந்திருந்த இடம், பல இடங்களிலிருந்து வந்த சாலைகள், சேரும் இடமாய் அமைந்திருந்தது. எனவே, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல வேண்டுமென்றால், கட்டாயம் கப்பார்நாகும் வந்துதான் செல்ல வேண்டும். அப்படி பொருட்களை விற்க வரும்போதும், தொழிலின் பொருட்டு பொருட்களை ஏற்றிவரும்போதும், சுங்க வரி கட்ட வேண்டும். அந்தப் பணியைத்தான் மத்தேயு செய்து வந்தார்.
மத்தேயு இதற்கு முன் இயேசுவை சந்தித்து இருக்கவில்லை. ஆனால், நிச்சயம் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்க வேண்டும். அதிகாரத்தோடு தீய ஆவிகளையும் அடக்குவதற்கு வல்லமை பெற்றிருக்கிற இயேசுவின் புகழ் நிச்சயம் அவர் அறிந்த ஒன்றாகத்தான் இருந்திருக்க வேண்டும். இதுவரை பாவிகளையும், வரிவசூலிக்கிறவர்களையும் ஒதுக்கிவந்த போதகர்கள் மத்தியில், இயேசுவின் போதனை மத்தேயுவிற்கு புதிதான ஒன்றாக அமைந்திருக்க வேண்டும். எனவே தான், அவர் இயேசுவைப் பார்ப்பதற்கு ஆவல் கொள்கிறார். இயேசுவைப் பின்பற்றியதால் அவருக்கு ஆதாயமும் இருந்தது. இழப்பும் இருந்தது. இயேசுவைப்பின்பற்றியதால் அவர் தனது பதவியை, வருமானத்தை இழந்தார். ஆனால் மிகப்பெரிய மதிப்பைப் பெற்றுக்கொண்டார். தனது வசதி, வாய்பை, பாதுகாப்பை இழந்தார். ஆனால், சவாலான, பெயர் நிலைத்து நிற்கக்கூடிய வாழ்வைப்பெற்றுக்கொண்டார். இறுதியாக இந்த உலக இன்பத்தை இழந்தார். ஆனால், முடிவில்லாத நிலையான ஆனந்தத்தைச் சுவைத்தார்.
மத்தேயுவைப் போல நாமும் இழப்பதற்கு தயாராக இருக்கிறோமா? ஒன்றை இழந்தால் தான், மற்றொன்றைப் பெற முடியும் என்பது நமது பழமொழி. இயேசுவைப் பெற வேண்டுமென்றால், இந்த உலகம் காட்டுகிற நியதியை, ஆதாயத்தை இழந்துதான் நாம் பெற வேண்டும். அதற்கு நாம் தயாராக இருக்கிறோமா? சிந்திப்போம், வாழ்ந்து காட்டுவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்