இழப்பதில் பெறுகிறோம்
லூக்கா 9:22-25
நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வாழ்வு, நம்மை நாமே பாதுகாத்து வைத்துக் கொள்வதற்காக அல்ல. பிறருக்கும் கடவுளுக்கும் ஈந்தளிப்பதற்காகவே என்ற சிந்தனைக்காக இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கிறது. பிறருக்காக வாழ்தல் மனித இனத்திற்கு மட்டுமே சற்று கடினமாக இருக்கிறது. ஆனால் இந்த உலகில் உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்தும் பிறருக்காகவே பிறக்கின்றன அல்லது தோன்றுகின்றன எனலாம். பிறர்க்காகப் பிறந்த நாம் மட்டுமே, அனைத்தையும் நமக்காக சேர்த்து வைக்கின்றோம் என்ற எண்ணத்தில் நிம்மதியின்றி அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றோம். இதற்கு மாறாக ஒரு நபர் தன் உயிரையும் உடமையையும் பொருட்படுத்தாமல் எதையும் சேகரிக்காமல் பிறர்க்காகவும், இந்த குமூகத்திற்காகவும் உழைத்தார் என்றால், அவர் உடல் காலமாகினாலும் அவரது உயிர் காலாவதியாகாமல்; மக்கள் மனதில் நின்று என்றும் வாழ்வார். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் அவர் இழப்பதை வேறு வாழ்வில் பெற்றுக் கொள்கிறார் எனலாம். இவ்வாறு பிறர் நலத்திற்காக நாம் உழைக்க முன்வரும் பொழுது நமது சுயபற்று ஐம்புலன்களின் ஆணவமும் நம்மை அறியாமலேயே நம்மைவிட்டு அகன்றோடும்.
இவைலெ;லாம் அனைவருக்கும் சாத்தியமா? என்ற கேள்வி உடனடியாக வரும். இந்த அறியாமையும் இருளாமையும்தான் இன்றுவரை விவரம் தெரிந்தவர்களையும் சிறைப்பிடித்து வைத்திருக்கின்றது. இக்காரணத்தினாலேயே இவ்வுலகில் நடக்கின்ற பல பிரச்சனைகளும் தீர்வுகள் கிடைக்காமலேயே கடந்து செல்கின்றன. இவையனைத்திற்கும் நம் முன்னால் இருப்பது இயேசுவின் படிப்பினைகளும் மதிப்பீடுகளும் தான். அவரது முன்மாதிரிகையைப் பின்பற்றி, இழப்பதில் பெறுகிறோம் என்பதில் நம்பிக்கைக் கொண்டு நம்மையே கொடுப்போம். கொடுத் ‘தாய்’ என்று பிறர் கூறும்போது நாம் தாயாகிறோம்.
– திருத்தொண்டர் வளன் அரசு