இல்லாதவர்களுக்கு நமது பங்களிப்பு
இயேசு போதித்த உவமைகளில், இன்றைய உவமை தான் நீண்ட விளக்கத்துடன் போதிக்கப்பட்ட ஓர் உவமை. வழிபாட்டு ஆண்டின் தொடக்கம் திருவருகைக்காலம். வழிபாட்டின் ஆண்டின் கடைசி வாரம் என்பதால், நமது இறுதிக்காலம் பற்றி வாசகம் நமக்குத்தரப்பட்டிருக்கிறது. வாசகத்தின் மையக்கருத்து, மனித தேவைகளுக்கு நாம் எப்படி பங்களிக்கிறோம்? என்கிற கேள்விதான்.
இயேசு நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது பெரிய, பெரிய காரியங்களை அல்ல. நாம் செய்யக்கூடிய, செய்ய முடிகின்ற சாதாரண காரியங்கள் தான். இன்றைய உவமையில் இயேசுவின் வலதுபக்கத்தில் இருக்கிறவர்களுக்கு, உண்மையில் தாங்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறோம் என்பதும் தெரியவில்லை, தாங்கள் செய்த சிறிய காரியங்கள் இவ்வளவு மகத்துவம் மிக்கவை என்பதும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனாலும், அதைத்தான் கடவுள் பாராட்டுகிறார். இந்த நற்செய்தியைக்கேட்டு மனம்மாற்றம் அடைந்தவர்கள் இரண்டு பெரிய புனிதர்கள். புனித பிரான்சிஸ் அசிசி மற்றும் புனித மார்ட்டின். இரண்டுபேருமே செல்வந்தர்களாக, அதிகாரம் மிகுந்தவர்களாக இருந்தபோதிலும், இயேசுவின் வார்த்தை அவர்களைத்தொட்டு அவர்களின் வாழ்வை மாற்றியது.
கடவுள் நாம் செய்ய முடியாததை நம்மிடமிருந்து எதிர்பார்ப்பதில்லை. நாம் செய்ய முடிகின்றவற்றை மட்டும்தான் எதிர்பார்க்கிறார். அப்படி செய்யக்கூடியவைகளிலும், சிறிய எதிர்பார்ப்புதான், கடவுளுடைய எதிர்பார்ப்பு. அவற்றைக்கூட செய்ய முடியாத தருணத்தில், நமது அழிவுக்கு நாமேதான் பொறுப்பு.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்