இறை அன்பில் நாளும் வளர்வோம்
தொடக்க காலத்தில் மக்கள் குழுக்களாக வாழ்ந்தபோது, ஒரு குழுவில் உள்ளவர் வேறொரு குழுவில் உள்ளவரை தீங்கு செய்தால், அது பெரும் சண்டையாக மாறி, இரண்டு குழுக்களுக்கும் பெரும் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டது. இதனைத்தவிர்க்க அவர்களுக்குள்ளாக புதிய ஒழுங்கைக்கொண்டு வருகிறார்கள். அதுதான் கண்ணுக்குக்கண், பல்லுக்குப்பல். இதன்படி ஒரு குழுவில் உள்ளவர் மற்ற குழுவில் உள்ளவரைத்தாக்கினால், பாதிக்கப்பட்டவருக்கும், அவரைத்தாக்கியவருக்கும் இடையே மட்டும் வழக்குத்தீர்க்கப்படும். ஒரு மனிதனுக்காக குழுக்கள் தங்களிடையே சண்டையிட்டுக்கொள்ளாது. பாதிக்கப்பட்டவருக்கு ஒரு கண் போயிருந்தால், அவரைத்தாக்கியவருக்கும் அதே தண்டனைக்கொடுக்கப்படும். இயேசு வாழ்ந்தபோது இதுதான் மக்களிடையே ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது.
இயேசு இப்போது மற்றொரு தளத்திற்கு மக்களை அழைத்துச்செல்கிறார். இதன்படி, பகைவருக்கும் அன்பு என்ற பழைய ஏற்பாட்டின் கட்டளைக்கு புத்துயிர் கொடுக்கிறார். இது புதியது அல்ல: மாறாக, புதுமையானது. “திருச்சட்டத்தை அழிக்க அல்ல: அதை நிறைவேற்றவே வந்தேன்”, என்று சொல்கிற இயேசுவின் வார்த்தைகள் இங்கே கவனிக்கத்தக்கவை. கண்ணுக்குக்கண் என்று சொல்கிற பழைய ஏற்பாட்டில் ஏராளமான இடங்களில் பகைவருக்கு அன்பு என்கிற பார்வை மேலோங்கிக்காணப்படுகிறது. உதாரணமாக, லேவியர் 19: 18 – “பழிக்குப்பழியென உன் இனத்தார்மேல் காழ்ப்புக்கொள்ளாதே. உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக!” நீதிமொழிகள் 25: 21 – “உன் எதிரிபசியோடிருந்தால் அவனுக்கு உணவு கொடு: தாகத்தோடிருந்தால் குடிக்கத்தண்ணீர் கொடு. நீதிமொழிகள் 24: 29 – “அவர் எனக்குச் செய்தவாறே நானும் அவருக்குச் செய்வேன்: அவர் செய்ததற்கு நான் பதிலுக்குப் பதில் செய்வேன், என்று சொல்லாதே”. புலம்பல் 3: 30 – தங்களை அறைபவர்களுக்குக் கன்னத்தைக் காட்டட்டும்”. இவ்வாறு திருச்சட்டத்தை நிறைவேற்றவே இயேசு வந்தார் என்பது இங்கே இறைவார்த்தைகளில் தெளிவாகிறது.
நாம் அனைவரும் இறைவனின் அன்பில் படைக்கப்பட்டவர்கள். இறை அன்பை வெளிப்படுத்த இறைவனால் எதிர்பார்க்கப்படுகிறவர்கள். அன்பையே நம் வாழ்வின் அடித்தளமாக கொள்வோம். இறைஅன்பில் நாளும் வளர்வோம்.
~ அருட்பணி. தாமஸ் ரோஜர்