இறை அனுபவம்
இயேசு தன்னுடைய அனுபவத்தை இங்கு விவரிக்கிறார். அவருடைய அனுபவம் என்ன? சாதாரண, எளிய மக்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டனர். ஆனால், ஆளுகின்றவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளாமல் புறந்தள்ளுகின்றனர். இயேசு இங்கு அறிவு ஆற்றலை கண்டிக்கவில்லை. மாறாக, அறிவுச்செருக்கை சாடுகிறார். தன்னை ஏற்றுக்கொள்ளாததால் கோபப்படவில்லை. மாறாக, உண்மைக்கு அவர்கள் செவிசாய்க்காததால் கண்டனம் செய்கிறார். நற்செய்தியை அறிவுப்பூர்வமாக அணுகினால் புரிந்து கொள்ள முடியாது. மாறாக, இதயப்பூர்வமாக அணுக வேண்டும். சாலமோன் போல ஞரனத்தைப்பெற்றிருந்தாலும், குழந்தையின் இதயத்தையோ, எளிமையையோ, கடவுள் நம்பிக்கையையோ பெற்றிருக்கவில்லை என்றால், அதனால் பயன் ஒன்றும் இல்லை.
யூதப்போதகர்களும் கூட இதை தாங்கள் வாழ்ந்த காலகட்டத்தில் ஏற்றுக்கொண்டிருந்தனர். அறிவினால் அல்ல, எளிமையான நம்பிக்கையினால் கடவுளை அடைய முடியும் என்பது அவர்கள் ஏற்றுக்கொண்ட உண்மை. தங்களை விட சாதாரண மக்கள் கடவுளுக்கு நெருக்கமாக இருந்தனர் என்பது அவர்கள் உணராதது அல்ல. இருந்தபோதிலும் அவர்களின் அறிவுச்செருக்கு, கடவுளைப்பற்றி நாங்கள் முழுமையாக அறிந்து வைத்திருக்கிறோம் என்கிற மமதை, அவர்கள் கடவுளை நெருங்கா வண்ணம் விலக்கி வைத்திருந்தது. கடவுளை நாங்கள் அடக்கி ஆள முடியும் என்ற தவறான சிந்தனையும் அவர்களின் இத்தகைய நிலைக்கு மிகப்பெரிய காரணம்.
கடவுளை அணுக எளிய உள்ளத்தவராக நாம் மாற வேண்டும். கடவுள் நமக்கு எட்டாதவர் அல்ல. அவர் நம்மோடு நெருங்கி வர ஆவல் கொண்டிருக்கிறவர். அப்படிப்பட்ட அன்பு வைத்திருக்கிற கடவுளை எளிய மனத்தோடு நெருங்குவோம். கடவுள் அருள் நிச்சயம் நமக்கு உண்டு.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்