இறைவார்த்தை நம்மை ஆட்கொள்ளட்டும்
எசேக்கியேல் 2: 8 – 3: 4
இன்றைய வாசகத்தில், ஆண்டவர்,எசேக்கியேலைப் பார்த்து கூறுகிறார்: ”உன் வாயைத் திறந்து நான் தருவதைத் தின்றுவிடு…….. நானும் என் வாயைத் திறக்க, அவர் அச்சுருளேட்டை எனக்குத் தின்ன கொடுத்தார்”. வார்த்தைகளைத் தின்பது, வார்த்தைகள் அடங்கியுள்ள சுருளேட்டைத் தின்பது என்கிற செய்தி, நமக்கு புதுமையாக இருந்தாலும், விவிலியத்தில் இது புதிதாக கொடுக்கப்படுகிற சிந்தனை அல்ல. ஏற்கெனவே ஒரு சில பகுதிகளில், இது போன்ற சிந்தனைகள் தரப்பட்டிருக்கின்றன.
எரேமியா 15: 16, ”நான் உம் சொற்களைக் கண்டடைந்தேன். அவற்றை உட்கொண்டேன். உன் சொற்கள் எனக்கு மகிழ்ச்சி தந்தன. என் உள்ளத்திற்கு உவகை அளித்தன”. யோவான் 6: 53 – 58 பகுதியும், இயேசு எப்படி வாழ்வு தரும் உணவாக இருக்கிறார் என்றும், அவருடைய சதையாக நமக்குத் தரப்படுகிற இறைவார்த்தையை உண்பவர்கள் வாழ்வு பெறுவார் என்று நமக்கு அழைப்புவிடுக்கிறார். திருவெளிப்பாடு 10: 8 – 9, ”விண்ணகத்திலிருந்து நான் கேட்ட குரல் என்னிடம் மீண்டும் பேசி, கடலின் மீதும் நிலத்தின் மீதும் நிற்கின்ற வானதூதரின் கையில் உள்ள பிரிக்கப்பட்ட சுருளேட்டை நீ போய் வாங்கிக் கொள், என்றது. நானும் அந்த வானதூதரிடம் சென்று, அந்த சிற்றேட்டை என்னிடம் தரும்படி கேட்டேன். அவரோ, இதை எடுத்துத் தின்றுவிடு. இது உன் வயிற்றில் கசக்கும், ஆனால், வாயில் தேனைப் போல் இனிக்கும், என்று கூறினார். மேற்சொன்ன அத்தனை இறைவார்த்தையும் நமக்குத் தருகிற செய்தி ஒன்று தான். எப்படி நாம் உண்கிற உணவு, நம் உடலாக மாறுகிறதோ, அதிலிருந்து வெளிப்படுகிற ஆற்றல் நம்மை இயக்குகிறதோ, அதே போல கடவுளிடமிருந்து வெளிவருகிற வார்த்தையினால், நாம் ஆட்கொள்ளப்பட (Possessed) வேண்டும். அது நம் அங்கமாக மாற வேண்டும். அது நம்மை இயக்க அனுமதிக்க வேண்டும்.
இறைவாக்கினர்கள் வாழ்க்கையில் இது தான் நடந்தது. அவர்கள் கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொண்டார்கள். அதனால் ஆட்கொள்ளப்பட்டார்கள். அவர்களின் அங்கமாகவே மாறியது. அது அவர்களை இயக்க தங்களையே முழுமையாக அர்ப்பணித்தார்கள். எனவே தான், அவர்களால் மிக்ச்சிறப்பாக, மிகத் துணிவாக இறைவனின் வார்த்தையை எல்லாருக்கும் அறிவிக்க முடிந்தது. நற்செய்தி அறிவிக்கிற கடமையைக் கொண்டிருக்கிற ஒவ்வொரு கிறிஸ்தவரும், இறைவார்த்தையினால் ஆட்கொள்ளப்படுவதற்கு, ஆண்டவரிடம் நம்மையே கையளிப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்