இறைவார்த்தையின் மீது நம்பிக்கை
அனைவருக்கும் இயேசு உயிர்ப்பின் வாழ்த்துக்கள்
இயேசு தனது போதனையிலே எவ்வளவோ வாக்குறுதிகளைத் தந்திருக்கிறார். அவரது போதனையில் நிலைத்திருக்கிறவர்கள் அரும்பெரும் செயல்களைச் செய்வார்கள் என்று சொல்லியிருக்கிறார். தனது மழைப்பொழிவிலே, நீதியின்நிமித்தம் துன்பங்களைச் சந்திக்கிறவர்கள் விண்ணரசில் இடம்பெறுவார்கள் எனப்போதித்து இருக்கிறார். நம்பிக்கையோடு கடவுளிடம் கேட்கும்போது நிச்சயம் நாம் பெற்றுக்கொள்வோம் என்று நம்பிக்கையூட்டியிருக்கிறார். தாழ்ச்சியோடு வாழ்கிறவர்களை கடவுள் உயர்த்துவார் என்று, தாழ்ச்சியுள்ளவர்களை மேன்மைப்படுத்தியிருக்கிறார். இந்த போதனைகள் அனைத்துமே நடக்குமா? நிறைவேறுமா? என்று கேட்டால், நம்மில் பலபேருக்கு அது சந்தேகம் தான். கடவுளை நம்புகிற நம்மில் பலபேர், அவர் சொன்னதெல்லாம் நடக்கும், இறைவார்த்தையில் சொல்லப்பட்டதெல்லாம் நடந்தேறும் என்று நம்பிக்கை கொள்வதில்லை. ஆனால், இன்றைய நற்செய்தி கடவுளின் வார்த்தை உண்மையானது, அது நிச்சயம் நடந்தேறும் என்பதை தெளிவாக்குகிறது.
இயேசு உயிர்த்தார் என்கிற செய்தி நிச்சயம் பலபேருக்கு நம்பக்கூடிய செய்தியாக இருந்திருக்காது. ஏனென்றால், இதுவரை எத்தனையோ மனிதர்கள் இறந்திருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் திரும்பி வந்தது கிடையாது. இப்போது இயேசு தான் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அதனை வெறுமனே வார்த்தைகளாகத்தான் எடுத்திருப்பார்களேயொழிய, அதனை உண்மையான வார்த்தைகளாக யாரும் எடுத்திருக்க மாட்டார்கள். ஆனால், இன்றைக்கு இயேசு உயிர்த்திருக்கிறார். ஆக, கடவுளின் வார்த்தை உண்மையாயிருக்கிறது. நடக்காது, நடக்கவே முடியாது என்று நினைத்திருந்த வாக்குறுதி நடந்தேறியிருக்கிறது. எனவே, இயேசுவின் வார்த்தைகள் உண்மையானவை என்கிற, ஆழமான செய்தியை இது நமக்குத் தருகிறது.
இன்றைக்கு நாமும் கூட திருப்பலியிலே வாசகங்கள் வாசிக்கப்படுகிறபோது அதனை கருத்தூன்றிக் கேட்காததற்கு காரணம், நமது நம்பிக்கையின்மையும் ஒரு காரணம். கடவுளை நாம் நம்பினாலும், இறைவார்தையை, கடவுளின் வார்த்தையை நாம் நம்புவதற்கு தயாராக இல்லை. அந்த நம்பிக்கையின்மையிலிருந்து, நம்பிக்கை வாழ்விற்கு, இந்த உயிர்ப்பு நம்மை அழைத்துவரட்டும்.
~அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்