இறைவார்த்தையின் மகத்துவம்
பாலஸ்தீனத்தில் வாழ்ந்த விவசாயிகள் விதைகளை விதைப்பதற்கு இரண்டு முறைகளைப் பயன்படுத்தினர். இந்த விதைக்கும் முறையைப் பயன்படுத்தி, இயேசு மக்கள் புரிந்துகொள்ளக்கூடிய வகையில், அழகான ஒரு உவமையை நமக்குத் தருகிறார். நிலத்தில் இறங்கி விதைகளைத்தூவுவது முதல்முறை. ஒரு கழுதையின் மீது விதைப்பையை வைத்து, இரண்டு பக்கங்களிலும் சிறிய துளையிட்டு, கழுதையை நிலம் முழுவதும் நடக்கச்செய்வது இரண்டாம் முறை. ஆனால், இரண்டாம் முறை வெகு அரிதாக நடைமுறையில் இருந்தது. முதல் முறைதான் விதைக்கும் முறையாக பரவலாக இருந்தது.
இன்றைய நற்செய்திப் பகுதியில் விதைப்பவர் விதைகளைத் தூவுகிறார். இயேசு மக்களுக்குப் போதித்துக்கொண்டிருக்கின்ற போது, இந்த நிகழ்வு நடந்திருக்க வேண்டும். அந்த நிகழ்வை அப்படியே தனது போதனையாக மாற்றுகிறார். எளிய மக்களின் வாழ்வுமுறையிலிருந்து போதிப்பது, இயேசுவின் தனிச்சிறப்பு. இயேசுவின் போதனை இரண்டு அடித்தளத்தை உள்ளடக்கியது. முதலாவது இறைவார்த்தையைக் கேட்பவர்களுக்கானது. இரண்டாவது இறைவார்த்தையைப் போதிப்பவர்களுக்கானது. இரண்டு பேருமே இறைவார்த்தையின் மீது ஆர்வம் உள்ளவர்களாக, நம்பிக்கை உள்ளவர்களாக, செயல்படுத்துகிறவர்களாக இருக்க வேண்டும் என்பது இயேசுவின் ஆசை.
இறைவார்த்தை என்பது குறிப்பிட்ட மக்களுக்கானது அல்ல. அது அனைவருக்கும் பொதுவானது. கேட்கிற அனைவருக்குமே அது அழைப்பு விடுக்கிறது. உறுதுணையாய் இருக்கிறது. அதனை நமது வாழ்வில் செயல்படுத்துவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்