இறைவார்த்தை
பாலஸ்தீனப்பகுதியில், கோடைகாலத்தில் ஆறுகள் வறண்டு மணல்மேடுகளாக காட்சியளிக்கும். செப்டம்பர் மாதத்திற்கு பிறகு மழைக்காலம் வருகின்றபோது, தண்ணீர் வெள்ளம் போல, ஆறு பெருக்கெடுத்து ஓடும். புதிதாக வீடு கட்ட இடம் தேடுகிற ஒருவன், ஆறுகள் வறண்டு மணல்திட்டுகளாக இருப்பதைக்கண்டு, கட்டுவதற்கு அது எளிதான இடம் என்பதால், அதைத்தேர்ந்தெடுக்கிறான். மழை வருகிறபோது, வெள்ளம் வந்து அவனுடைய உழைப்பையெல்லாம் வீணாக்கப்போகிறது என்பது தெரியாமல், அந்த வீட்டைக்கட்டுகிறான். இறுதியில் வீடு ஆற்றோடு போய்விடுகிறது. கட்டுவதற்கு கடினமாக இருந்தாலும், அனைத்தையும் பொறுத்துக்கொண்டு, பாறை மீது பொறுமையாக வீடுகட்டுகிறவன், வெள்ள நேரத்தில் ஆபத்து இல்லாமல் மகிழச்சியோடு வாழ்கிறான்.
எதற்காக, ஒரு மனிதர் மண்மீது வீடுகட்டுகிறார்? 1. அது அவரின் சோம்பேறித்தனத்தைக் காட்டுகிறது. பாறைமீது வீடு கட்டுவதைக்காட்டிலும், மணல்மீது எளிதாக வீடுகட்டி விடலாம் என்கிற சோம்பேறித்தனமான எண்ணம் தான் அவரது அழிவுக்குக்காரணமாகி விடுகிறது. 2. எதிர்காலத்தில் அவர் சந்திக்கிற ஆபத்தைப்பற்றி சீராயாத நிலையைக்காட்டுகிறது. எந்தஒரு பணியைச்செய்தாலும் அது சரியான திட்டமிடலோடு இருக்க வேண்டும். எதிர்காலத்தில் நாம் சந்திக்கப்போகிற சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்திருக்க வேண்டும். அப்படியே எதிர்பாராத ஆபத்து வந்தாலும் அதை சமாளிப்பதற்கு பல திறமையான வேலைகள் செய்திருக்க வேண்டும். அது எதையும் செய்யவில்லையென்றால், நமக்கு பேரழிவுதான் மிஞ்சும்.
கடவுளுடைய வார்த்தையை மேலோட்டமாகப் படித்து ஏனோ,தானோவென்ற மனநிலையோடு அதைச்செயல்படுத்த முடியாது. மாறாக, அந்த இறைவார்த்தையின் ஆழத்திற்குள்ளாக நாம் செல்ல வேண்டும். அது நமக்கு வைத்திருக்கிற மறைபொருளை அறிய முற்பட வேண்டும். அறிந்து அதை செயல்படுத்த சரியான திட்டமிடல் நமது வாழ்வில் வேண்டும். அப்போது நமது வாழ்வு நிறைவானதாக இருக்கும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்