இறைவாக்குப் பணி
எசேக்கியேல் 2: 2 – 5
இறைவாக்கினர் எசேக்கியேல், கடினமான நேரத்தில் இறைவாக்குப் பணியைச் செய்ய இறைவனால் அனுப்பப்படுகிறார். கி.மு.597 ம் ஆண்டு, பாபிலோனியர்கள் யூதாவை முற்றுகையிடுகிறார்கள். வேறு வழியில்லாமல் பாபிலோனியர்களிடம் யூதர்கள் சரணடைகிறார்கள். யூதர்களுக்கு மிகப்பெரிய கப்பத்தொகையை அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டியதிருக்கிறது. செதேக்கியாவை யூதர்களின் அரசனாகவும், தங்களின் கைப்பொம்மையாகவும் பாபிலோனியர்கள் நியமனம் செய்கிறார்கள். ஆனால், பத்து ஆண்டுகளுக்குப் பின், செதேக்கியா பாபிலோனியர்களுக்கு எதிராக நிற்பதற்கு தயாராகுகிறார். எகிப்தியர்களுடன் சேர்ந்து கொண்டு, பாபிலோனியர்களை எதிர்க்கத் துணிகிறார். இது நெபுகத்நேசருக்கு கோபத்தைத் தூண்டுகிறது. கி.மு.587 ம் ஆண்டு, மீண்டும் எருசலேம் நகருக்கு படையெடுத்து வந்து, அவர்களை சின்னாபின்னமாக்குகிறார். எருசலேமை தரைமட்டமாக்குகிறார். இருக்கிற செல்வங்கள் அனைத்தையும் கொள்ளையடிக்கிறார். மீண்டும் தன்னுடைய கைப்பொம்மையாக அரசரை நியமிப்பதில் அவருக்கு உடன்பாடில்லை. எனவே, அனைவரையும் நாடுகடத்துகிறார். இஸ்ரயேல் என்கிற நாடு இல்லாமல் போகச் செய்கிறார். இப்படிப்பட்ட மோசமான, துயரமான நேரத்தில் இறைவாக்கினர் எசேக்கியேல் இறைவாக்குப் பணியைச் செய்ய இறைவனால் அழைக்கப்படுகிறார்.
எசேக்கியேல் காட்சி காண்கிறார். அந்த காட்சியில், “மானிடா! எழுந்து நில்!” என்கிற குரல் கேட்டு எழுந்து நிற்க முயல்கிறார். ஆனால், அவரால் முடியவில்லை. அப்போது, ஆண்டவருடைய ஆவி அவருக்குள்ளாக புகுந்து அவரை எழுந்து நிற்கச் செய்கிறது. இங்கு அருமையான செய்தி ஒன்று நமக்கு தரப்படுகிறது. ஆண்டவருடைய அடியார்கள் அனைவருமே, இறைவனுடைய ஆற்றலால் எழுந்து நிற்கிறார்கள் என்பது தான், நாம் பெறுகிற செய்தியாக இருக்கிறது. மனிதர்களான நம்மால், இறைவனுடைய வார்த்தையை அறிவிப்பதற்கு போதுமான பலத்தைக் கொடுக்க முடியவில்லை. கொடுக்கவும் முடியாது. இறைவன் ஒருவரால் மட்டும் தான், நமக்கு தேவையான பலத்தைக் கொடுக்க முடியும். இறைவாக்கினர் ஒவ்வொருவரும் இந்த ஆவியின் ஆற்றலால் தான், துணிந்து பேசினார்கள். இறைவார்த்தையை அறிவித்தார்கள்.
நம்முடைய வாழ்வில், இறைவனுடைய பணியைச் செய்ய முன்வருகிறபோது, இந்த பணியை நம்மால் செய்ய முடியுமா? இந்த பணியைச் செய்வதற்கான ஆற்றல் நம்மிடம் இருக்கிறதா? என்கிற கேள்வி எழலாம். ஆனால், அதனையும் கடந்து, இறைவனுடைய ஆற்றல் மீது நம்பிக்கை வைத்து, நாம் அந்த பணியைச் செய்கிறபோது, நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம் என்பதை விட, இறைவன் அற்புதமான காரியங்களைச் செய்வார்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்