இறைவாக்கினர் எலியா கொண்டிருந்த விசுவாசம்
1அரசர்கள் 18: 20 – 39
இறைவன் மீது அளப்பரிய நம்பிக்கை வைத்திருக்கிற ஒரு மனிதரைப் பற்றிய இன்றைய வாசகம் நமக்கு எடுத்தியம்புகிறது. அவர் தான் இறைவாக்கினர் எலியா. யார் உண்மையான இறைவன்? இது தான், போட்டிக்கான கேள்வி. ஆண்டவரா? அல்லது பாகாலா? இறைவன் எவ்வளவோ நன்மைகளையும், வல்ல செயல்களையும் செய்தாலும்,ஒரு கட்டத்தில் மக்கள், இறைவனை மறந்து போகிறவர்களாகத்தான் இருக்கிறார்கள். நிச்சயம், இந்த நிலை எலியாவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், வருந்தி ஒன்றும் ஆகப்போவதில்லை. அவர்களை விசுவாசத்திற்கு மீண்டும் அழைத்து வர வேண்டியது அவருடைய கடமை என்பதை உணர்கிறார். அதற்காக, எத்தகைய எதிர்ப்பையும் சம்பாதிப்பதற்கு அவர் தயாராக இருக்கிறார்.
அங்கு நடந்த நிகழ்வில், ஆண்டவர் தான் உண்மையானவர் என்பது உணர்த்தப்படுகிறது. தன்னுடைய வேண்டுதல் கேட்கப்படுமா? இறைவன் பலியை ஏற்றுக்கொள்வாரா? என்றெல்லாம், எலியா சந்தேகம் கொள்ளவில்லை. அதைப்பற்றிய எள்ளளவும் கவலையும் இல்லை. தான் கொண்டிருக்கிற நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறார். தன்னுடைய மன்றாட்டுக்கு இறைவன் செவிமடுப்பார் என்று உறுதியாக நம்புகிறார். தான் கொண்டிருக்கிற விசுவாசம் எவ்வளவுக்கு உண்மையானது என்பதை, தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறார். இறைவன் மீது நாம் முழுமையான நம்பிக்கை கொண்டிருந்தால், எதுவும் நம்மை தோல்வியுறச் செய்ய முடியாது என்பதில், மிக உறுதியாக இருக்கிறார். பல மக்களை மீண்டும் ஆண்டவரில் நம்பிக்கை கொள்ளச் செய்கிறார்.
நம்முடைய வாழ்வில் நாம் இறைவனின் கருவியாக இருந்து, மக்களை ஆண்டவர்பால் அழைத்து வரக்கூடிய பணியைச் செய்வதற்கு அழைக்கப்படுகிறோம். அதற்கு, நாம் முதலில் விசுவாசத்தில் உறுதியுள்ளவர்களாக இருக்க வேண்டும். நம்பிக்கையில் வேரூன்றி இருக்கிறவர்களாக இருக்க வேண்டும். அந்த விசுவாசம் மற்றவர்களையும் இறைவனிடத்தில் அழைத்து வர மன்றாடுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்