இறைவாக்கினர்களின் பணி
ஆமோஸ் 7: 10 – 17
இரண்டாவது எரோபவாமின் ஆட்சிக்காலத்தில், இஸ்ரயேலில் வளமையும், அமைதியும் நிறைந்திருந்தது. ஆனால், அதற்கு மையமாக விளங்கிய, அதற்கு காரணமாக விளங்கிய இஸ்ரயேலின் கடவுளை அவர்கள் மறந்துவிட்டனர். இன்றைய பகுதி, பெத்தேலின் குருவாகிய அமட்சியாவிற்கும், இறைவாக்கினர் ஆமோசிற்கும் இடையே நடக்கும் வாக்குவாதத்தை எடுத்துரைக்கிற நிகழ்வாக அமைகிறது. அமட்சியா, ஆமோசை பிழைப்புவாதி என்றும், பிழைப்பிற்காக இறைவாக்கு உரைக்கிறவர் என்றும் சாடுகிறார். அரசனிடமும் அவரைப்பற்றி அவதூறான வார்த்தைகளைச் சொல்கிறார். அவரை வேறு எங்காவது இறைவாக்குரைத்து, அவரது வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறுகிறார்.
ஆனால், ஆமோசோ அது தன்னுடைய பிழைப்பு அல்ல என்பதை உறுதிப்படுத்துகிறார், “நான் இறைவாக்கினன் இல்லை. இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை. நான் ஆடு மாடு மேய்ப்பவன். ஆண்டவர் என்னைத் தேர்ந்தெடுத்து, இறைவாக்கு உரைத்திடு என்று சொன்னார்” என்று கூறுகிறார். இப்போது அவருடைய சினம், அமட்சியாவை நோக்கி திரும்புகிறது. “இஸ்ரயேலுக்கு எதிராக இறைவாக்கு உரைக்காதே. ஈசாக்கின் வீட்டார்க்கு எதிராகப் பேசாதே, என்று நீ சொல்கிறாய்! ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உன் மனைவி நகரில் விலைமகளாய் இருப்பாள். உன் புதல்வர் புதல்வியர் வாளால் மடிவர்..”. இங்கு “நீ கூறுகிறாய்…ஆனால், ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்…. ” என்கிற வார்த்தைகள் அர்த்தம் பொதிந்தவை. அமட்சியா தன்னுடைய எண்ணத்தை, தான் விரும்புவதை, தன்னுடைய சிந்தனையை எடுத்துரைக்கிறார். ஆனால், அது கடவுளின் வார்த்தையை புறக்கணிப்பதாக இருப்பதால், அதற்கான தண்டனை அவர் பெற்றுக்கொள்கிறார்.
இறைவார்த்தையின் மட்டில், கடவுளின் பணியாளர்கள் மட்டில் நாம் எச்சரிக்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதை, இந்த பகுதி நமக்கு நினைவூட்டுகிறது. இறைவனின் பணியாளர்களைப் பற்றிய நம்முடைய எண்ணங்கள், செயல்பாடுகள் சரியானதாக, தெளிவானதாக இருக்க வேண்டும். அவதூறுகளைப் பரப்புவதோ, அவர்களை அநீதியாக எதிர்ப்பதாகவோ இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், அதற்கான விளைவுகளைச் சந்தித்தே ஆக வேண்டும்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்